சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும், உள்நாட்டு திரைப்படத் துறையைப் பாதுகாக்கும் அதேவேளை, வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு இலங்கை ரசிகர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடனான கலந்துரையாடலில் இன்று (26) முற்பகல் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொழில்துறையாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக பெறுமதி சேர் வரி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் தொழில்துறையை விரிவுபடுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஜனாதிபதியிடம் விளக்கமளித்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் சினிமா ஒரு துறையாக வரலாற்றில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், அதனைத் தொடர அரசாங்க ஆதரவை வழங்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹதிவுல்வெவ மற்றும் பொது முகாமையாளர் ருவன் பிரேமவீர ஆகியோரும் இதன்போது கலந்துக்கொண்டனர்.




