லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன மட்டுக்கலை தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எட்டாம் இலக்க லயன் குடியிருப்பிலேயே இன்று அதிகாலை 2.30 அளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதனால் ஒரு குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த தீ விபத்தால், குடியிருப்பில் காணப்பட்ட தொலைக்காட்சி பெட்டி, பாடசாலை உபகரணங்கள் மற்றும் வீட்டு தளபாடங்கள் என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இந்த தீ விபத்தினால் எவருக்கும் எவ்வித தீ காயங்களோ உயிர் ஆபத்துக்களோ ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த குடியிருப்பில் ஏற்பட்ட தீயை ஏனைய குடியிருப்புகளுக்கு பரவாமல் தோட்ட மக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், விடயமறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த லிந்துலை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.