சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக சர்வதேச நியதிகள் தேவை என மலையக மக்கள் முன்னணி தெரிவிப்பு.

0
190

சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக சர்வதேச நியதிகள் தேவை என நாட்டில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாட்டு தொடர்பான ஆணைக்குழுவிடம் மலையக மக்கள் முன்னணி தெரிவிப்பு.

சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக சர்வதேச நியதிகள் தேவையென மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். டி. நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவிடமே இம்மும்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர் நிமல் அபேசிறி ஆகியோர் இந்த குழுவின் ஆணையாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம்பெற்று வரும் மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், மற்றும் அக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் முனைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் ஆகியோர் சாட்சியமளித்துள்ளனர்.

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மலையக மக்களின் தனித்துவமான அடிப்படை பிரச்சினைகள் என்ற ரீதியிலும் தீர்வுகளை வலியுறுத்தி ஆணைக்குழுவிடம் பூர்வாங்க அறிக்கையினையும் கையளிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது முன்வைக்கபட்ட சாட்சியங்கள் மற்றும் பிரதான கோரிக்கைகள் பின்வருமாறு:

● இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக இனியும் காலம் தாழ்த்தாமல் நிரந்தர அரசியல் தீர்வொன்று காணப்படல் வேண்டும்.

● உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வரும்போது இந்நாட்டின் சகல இன மக்களுக்கும் சமமான உரிமைகளும் சமூக அந்தஸ்தும் யாப்பு ரீதியாக உறுதிப் படுத்தப்படல் வேண்டும். அதில் மலையக மக்களுக்கு தனியான தேசிய இனம் என்ற அடையாளத்துடன் அங்கீகாரம் வழங்கப்படல் வேண்டும்.

● மனித உரிமைகள் சார்ந்த ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இனம், தேசியம், மதம், மொழி, நிறம், கலாச்சாரம், பிரதேசம், பால், வயது, உடல் உள வலு ரீதியான பாகுபாடுகளற்ற தன்மையை உறுதி செய்ய வேண்டும். சகலருக்கும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள் சட்டத்தின் முன் சமநிலை, கருத்து சுதந்திரம், கல்வி பண்பாடு, விரும்பும் தொழிலை செய்யவும், விரும்பும் இடத்தில் வசிக்கும் உரிமைகள் போன்ற அனைத்தும் அரசியல்யலைமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

● உத்தேச தேர்தல் முறைமைகள் தொடர்பான யோசனைகளில் சிறுபான்மை சமூகங்களின் விகிதாச்சார, கலப்பு பிரதிநிதித்துவம் மற்றும் தொகுதி நிர்ணயத்தில் ஜனநாயக ரீதியான அங்கத்துவம் என்பன பாரபட்சமின்றி உறுதி செய்யப்படல் அவசியம்.

● அதிகார பரவலாக்கம் என்ற விடயத்தில் மாகாணம், மாவட்டம் மற்றும் உள்ளூராட்சி தொகுதிகளில் காணப்படும் சமத்துவமின்மை நீக்கப்படுவதோடு நிர்வாகம், அபிவிருத்தி என்பனவற்றில் சகலருக்கும் ஏற்ற வகையில் நிலையான கொள்கைகள் அவசியம்.

● இந்திய இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் குறைந்த பட்ச தீர்வாக 13 வது சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களுடன் துரிதமாக தேர்தல்களை நடாத்த வேண்டும்.

● மலையக மக்களின் குடியிருப்பு, புதிய கிராமங்கள் அடிப்படையிலான வீடமைப்பு,குடிநீர் வசதி, சுகாதாரம் , போக்குவரத்து, காணி, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி, (தனியான பல்கலைக்கழகம்) வர்த்தகம், கைத் தொழில்கள் மற்றும் தொழிலாளர் சமூக நலன்கள் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவான நிரந்தர தீர்வுகள் வேண்டும்.

● தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள், தொழில் சம்பந்தமான ஏனைய உரிமைகள், மாற்றுப் பயிர் செய்கை, மலையக மக்கள் கட்டம் கட்டமாக சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றம் காண்பது, சிறு குறு கைத்தொழில் முயற்சிகள்கள், கால்நடை வளர்ப்பு, மற்றும் ஏனைய கைத்தொழில் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

● மலையக இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்புடன் சமூக பொருளாதார நிலைகளில் தேசிய மட்டத்தில் ஏனைய சமூகங்களுடன் சமமான செயற்பாடுகள் மூலமாக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும்.

● தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் தோட்ட வீடமைப்பு அமைச்சுக்கு மீண்டும் கெபினெட் அந்தஸ்து மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சினை மீண்டும் உருவாக்க வேண்டும்.

● தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விரைவான தீர்வு மற்றும் காரணமின்றி மலையக இளைஞர்கள் நகர்ப்புறங்களில் கைதாவதை தடுத்து நிறுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மலையக இளைஞர்களுக்கும் சம வாய்ப்புகள் உருவாக்கப்படல் அவசியம்.

● சிறுவர் துஷ்பிரயோகம், வயது குறைந்தோர் வீடுகளில் வர்த்தக நிலையங்களில் வேலைக்கர்த்தலை தடுத்தல் மற்றும் முதியவர்கள் தொடர்பான சமூக நலன்கள் குறித்து விஷேட கவனம்செலுத்த வேண்டும்.

● இனக் கலவரம் மற்றும் யுத்த பாதிப்புகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான தெளிவான கொள்கையும், இந்தியா அகதிகள் முகாம்களிலும் வெளியிலும் வாழும் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு அவர்களின் விருப்பங்களை அறிந்து ராஜதந்திர தூதரக மட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும்.

● மலைநாட்டுக்கு வெளியே வட மாகாணத்தின் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளியினரின் நிர்வாகம், அபிவிருத்தி சார்ந்த உரிமைகள் தொடர்பாக ஜனநாயக பிரதிநிதித்துவம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்

● நாடு தழுவிய ரீதியில் சுமார் 20 மாவட்டங்களில் பரந்து வாழும் இந்திய வம்சாவளியினர் சார்பாக ஒரு நிர்வாக அலகு ஏற்படுத்தல் அவசியம். இந்தியாவில் ‘பாண்டிச்சேரி’ போன்ற பிரதேச எல்லைகளைக் கொண்டிராத மாநில நிர்வாக அதிகாரம் கொண்ட முதலமைச்சர், அமைச்சரவை முறைமையிலான சுயாட்சி நிர்வாகம் பற்றிய ஒரு பொறிமுறையொன்றை உருவாக்கும் அதேவேளையில் ஏனைய சமூகங்களும் அமைச்சரவையில் இடம்பெறலாம்.

● வடகிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் பூர்வீக மக்களுக்கு மீளக்கையளிக்க வேண்டும். போரில் உயிரிழந்த மக்களின் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்த உரிமைகள் வழங்க வேண்டும். முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும்.

● மலையக மக்களின் பல்வேறு அபிவிருத்திகள் சார்ந்த அதிகார சபை மற்றும் பொது நிதியம் ஊடாக சேவைகளை ஆற்றிட அரசியல் பாகுபாடுகள் இல்லாத பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும்.

பூர்வாங்க அறிக்கைக்கு மேலதிமாக சாட்சியங்களின் போது மேலோட்டமாக ஆராயப்பட வேண்டும். ஏனைய விடயங்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கையினை சமர்பிப்பதற்கும் ஆணைக்குழுவில் இணக்கம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here