படல்கும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னகட்டிய வாசிபான பிரதேசத்தில் வசிக்கும் 08 வயது 05 மாத சிறுமியை வன்புணர்வு செய்த 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை செவ்வாக்கிழமை (17) படல்கும்புர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறுமியின் தந்தை கொழும்பு பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளதோடு, தாய் சகோதரர் மற்றும் சகோதரியுடன் அச்சிறுமி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதற்கமைய, கடந்த 13ஆம் திகதியன்றுகுறித்த சிறுமி பாடசாலையிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்த நிலையில், ஹேமந்த மாமா என்ற சந்தேக நபர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு படல்கும்புர நகரில் உள்ள இரண்டு மாடி வீடொன்றிற்கு அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளார்.
இது தொடர்பில் சுகாதார உத்தியோகத்தர் அறிந்துகொண்டதை அடுத்து அச்சிறுமியின் தாயார் பொலிஸில் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து , படல்கும்புர பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான சிகையலங்காரம் செய்யும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபர் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.