சிறுவர்களுக்கு உடல் ரீதியாக கொடுக்கப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பாகவே கடந்த ஆண்டு அதிகமாக முறைப்பாடுகள் கிடைத்தன.
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் வன்புணர்கள், பாலியல் தொந்தரவுகள், உடல் ரீதியான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த நான்கு மாதங்களில் சுமார் 3 ஆயிரத்து 102 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக 10 ஆயிரத்து 497 முறைப்பாடுகள் கிடைத்ததாக அதிகார சபையின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவின் பணிப்பாளர் சட்டத்தரணி சஞ்ஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான செய்தியளிப்பு குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
சிறுவர்களுக்கு உடல் ரீதியாக கொடுக்கப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பாகவே கடந்த ஆண்டு அதிகமாக முறைப்பாடுகள் கிடைத்தன. இது சம்பந்தமாக 2 ஆயிரத்து 96 முறைப்பாடுகள் கிடைத்தன.
இதனை தவிர பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்லாது தொடர்பாக ஆயிரத்து 231 முறைப்பாடுகளும், பிள்ளைகள் பராமரிக்கப்படாது கைவிடப்பட்டமை குறித்து 2 ஆயிரத்து 5 முறைப்பாடுகளும் கிடைத்தன.
பாரதூரமான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பற்றிய 185 முறைப்பாடுகள் கிடைத்தன. பிள்ளைகளை பிச்சை எடுக்க வைப்பது குறித்து 249 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை சம்பந்தமாக 167 முறைப்பாடுகளும், சிறுவர்களுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொந்தரவுகள் பற்றிய 729 முறைப்பாடுகளும் கிடைத்தன.
சிறுவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் 25 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் சஞ்ஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.