அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்,
நாம் அனைவரும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டிய நேரம் எது. பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்த வேண்டும்.
எனவே, இந்தக் காலக்கட்டத்தில் தேவையில்லாமல் எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
வரப்போகும் கடினமான மூன்று வாரங்களுக்குப் பிறகு, எரிபொருள் மற்றும் உணவை சிரமமின்றி வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.
பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடினமான மூன்று வாரங்களை பொறுமையாக எதிர்கொள்வோம்.
நம் நாட்டின் வருடம் ஒன்றிற்கான அரிசியின் தேவை 2.5 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும். ஆனால் எங்களிடம் 1.6 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி மாத்திரமே கையிருப்பில் உள்ளது.
அதனால், சில மாதங்களில் உணவு விடயத்தில் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
நமது அன்றாட உணவு தேவைகளை பூர்த்தி செய்ய உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கு ஒரு மாதத்திற்கு 150 மில்லியன் டொலர் அளவில் செலவாகும்.
ஆகையால், அழிந்து வரும் விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.