சிவனொளிபாத மலையின் பெயரை மாற்றியமைத்து – வரலாற்றை திரிவுபடுத்த இனவாதக்குழுவொன்று முயற்சித்துவருவதாலும், இப்பிரச்சினையானது இன ஐக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாலும் – இதுவிடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு – உரிய கட்டளைகளை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் ‘சிவனடிபாதம்’ என பெயர்பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு அகற்றப்பட்டு, ‘ கௌதம புத்தபகவானின் ஸ்ரீ பாதஸ்தானம்’ என பெயர் குறிக்கப்பட்ட கல்வெட்டு புதிதாக வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து வேலுகுமார் எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ மதம் என்பது உணர்வுப்பூர்வமான விடயமாகும். அதை தூண்டும் வகையிலும், சீண்டிப்பார்க்கும் நோக்கிலும் எவரும் செயற்படக்கூடாது. அன்பு, கருணை, ஒழுக்கம், அறவழி ஆகியவற்றையே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. ஏனைய மதங்களை அழித்து தம் மதத்தை பாதுகாக்குமாறும், வளர்க்குமாறும் எந்தவொரு மதமும் நிபந்தனை விதிக்கவில்லை.
நிலைமை இப்படியிருக்கையில் ஹட்டன் பகுதியிலுள்ள இனவாதக்குழுவொன்று அப்பாவி சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் மதவாத்தீயை மூட்டி, இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்க முயற்படுகின்றது. இதன்ஓர் அங்கமாகவே சிவனொளிபாத மலையில் பெயரை மாற்றும் நடவடிககை இடம்பெற்றுவருகின்றது.
ஒரு வீதியின் பெயரை மாற்றுவதாக இருந்தாலே ஆயிரம் நடைமுறைகளை பின்பற்றவேண்டும். அவ்வளவு இலகுவில் அனுமதி கிடைத்துவிடாது. ஆனால், புதிய பெயர்க்கல்லை வைப்பதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? இதன்பின்னணியில் பலம்பொருந்திய கரங்கள் உள்ளனவா என்ற சந்தேகமும் எழுகின்றது.
காவியுடை அணிந்த சிலரும் இதன்பின்னணியில் இருப்பதாகவும், காக்கிச்சட்டை அணிந்தவர்கள் அதை கண்டுகொள்ளவில்லையென்றும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, இப்பிரச்சினையை சாதாரண விடயமாக கருதிவிடமுடியாது.
நாட்டில் எப்பகுதிக்கு சென்றாலும் ஜனாதிபதியும், பிரதமரும் நல்லிணக்கம் பற்றியே பேசுகின்றனர். அதை குழப்பியடிப்பதற்கான முயற்சியாகக்கூட இது இருக்கலாம். ஆகவே, இதுவிடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக தலையிட்டு சிவனடிபாதம் என இருந்ததுபோலவே மீண்டும் பெயர் அமைய கட்டளைபிறப்பிக்கவேண்டும். அவ்வாறு இல்லையேல் இப்பிரச்சினையானது, பாரிய அழிவுக்கு வழிவகுக்கக்கூடும்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் தொல்பொருள் ஆய்வு என்றபோர்வையில் இந்துக்களின் பூர்வீக அடையாளங்களும், புனிதபூமியும் ஆக்கிரமிக்கப்பட்டுவருகின்றன. தொன்மைவாய்ந்த ஆலயங்களில்கூட புத்தர் சிலைகள் முளைக்கின்றன. இது பௌத்த மேலாதிக்கத்தையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு செய்யுமாறு புத்தபெருமான் எங்குமே கூறவில்லை. அவர் இன்று இருந்திருந்தால், சில பௌத்த அமைப்புகளின் செயற்பாடுகளைக்கண்டு இரத்தக்கண்ணீரே வடித்திருப்பார்.
ஒரு இனத்தையோ, மதத்தையோ அழிக்கவேண்டுமென்றால் இவ்விரண்டுக்கு எதிராகவும் போர்தொடுக்கவேண்டியதில்லை. இனத்தினதும், மதத்தினதும் கலை, கலாசாரம், அடையாளம் ஆகியவற்றை அழித்தாலே போதும் அவை தானாகவே அழிந்துவிடும். எனவே, இப்பிரச்சினையை சிறுதுளியென கருதி – கண்டுகொள்ளாமல்விட்டால் அது நாளை பாரிய சுனாமியாகக்கூட உருமாறக்கூடும்” என்று வேலுகுமார் எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லயத்து பொடியன்