சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ம் திகதி ஆரம்பம்…

0
183

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் 22.12.2018 அன்று பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.நல்லதண்ணி நகரத்தில் கிராம சேவகர் காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில் 29.11.2018 அன்று இடம்பெற்ற ஒன்றுக்கூடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒன்றுக்கூடலின் போது நாயக்க தேரரால் அழைக்கப்பட்ட பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், வன பாதுகாப்பு பரிபாலன அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், மின்சார சபை உயர் அதிகாரி, இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகள், விசேட அதிரடி பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன மேலும் தெரிவிக்கையில்,

இவ்வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலத்தை ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனி சுபவேளையில புறப்பட்டு பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, அட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாதமலையின் அடிவாரத்தினை வந்தடைவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இம்முறையும் 3 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணிக்கவுள்ளது.

அந்தவகையில் இரத்தினபுரி – அவிசாவளை வீதியில் ஊர்வலம் பயணித்து ஹட்டன் – நல்லதண்ணி ஊடாகசிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் பயணிக்கவுள்ளது.

மற்றைய ஊர்வலம் இரத்தினபுரி – பலாபத்தல வீதி ஊடாக பயணிக்கவுள்ளது. தெய்வீக ஆபரணங்களை ஏந்திய மூன்றாவது ஊர்வலம் பெல்மடுல்ல – ஓப்பநாயக்க, பலங்கொட, பின்னவல, பொகவந்தலாவ ஊடாக சிவனொளிபாதமலையை அடையவுள்ளது.

அத்துடன், சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின்னர் 22ஆம் திகதி அதிகாலை நடைபெறவுள்ள விசேட பூஜைகளைத் தொடர்ந்து 2018 – 2019ம் வருடத்திற்கான சிவனொளிபாதமலையாத்திரைப் பருவக்காலம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிவனொலிபாத மலை பருவகால யாத்திரை காலப்பகுதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், இந்த யாத்திரிகர்களுக்காக விசேட போக்குவரத்துச்சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட தயாராகவுள்ளதாகவும் சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன மேலும் தெரிவித்துள்ளார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here