சீக்குகே பிரசன்ன 6 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களை விளாச, கண்டி வோரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 பந்துகள் மற்றும் 5 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் கொழும்பு ஸ்டார்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று மாலை கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் வெற்றிக்கு இறுதி 13 பந்துகளில் 37 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
19 ஆவது ஓவருக்காக பினுர பெர்னாண்டோ பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்டும் சீக்குகே பிரசன்னவும் மொத்தமாக 15 ஓவர்களை விளாசினர்.
பின்னர் 6 பந்துகளுக்கு 16 ஓட்டம் நிலை இருந்தது.
இறுதி ஓவருக்காக லஹிரு குமார பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரை எதிர்கொண்ட சீக்குகே பிரசன்ன தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை விளாசித் தள்ளி அணியின் வெற்றியை உறுதிபடுத்தினார்.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை, கண்டி வோரியர்ஸ் அணிக்கு வழங்கியது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவர்கள் 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
முதல் விக்கெட் இணைப்பாட்டம் 8 ஓவர்களில் 77 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்திருந்த போதிலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்கத் தவறினர்.
ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய கென்னர் லூயிஸ் 62 ஓட்டங்களையும், சரித அசலங்க 28 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பின்னர் 147 என்ற இலக்கினை துரத்திய கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு ஆரம்பம் மோசமாக அமைந்தது.
ஆரம்ப வீரராக களமிறங்கிய பதும் நிஸ்ஸங்க டக்கவுட்டுடனும், பின்னர் வந்த திக்ஷிலா டி சில்வா 15 ஓட்டத்துடனும், அஷான் பிரியஞ்சன் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். அஞ்சலோ மெத்தியூஸ் ஓரளவுக்கு துடுப்பெடுத்தாடி 29 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் 12.1 ஓவரில் 61 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது கொழும்பு ஸ்டார்ஸ்.
எனினும் பின்னர் தினேஷ் சந்திமாலின் நிலையான துடுப்பாட்டம் அணிக்கு வெற்ற மீதான மோகத்தை ஏற்படுத்தியது.
மொத்தமாக 27 பந்துகளை எதிர்கொண்ட சந்திமால் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தர்.
இதனால் அணியின் ஐந்தாவது விக்கெட் 17.5 ஓவரில் 110 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.
அவரின் ஆட்டமிழப்பினை அடுத்து 6 ஆவது கிக்கெட்டுக்காக சீக்குகே பிரசன்ன மற்றும் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் ஜோடி சேர்ந்து அதிரடிகாட்ட இறுதியில் 19.4 ஓவரில் 150 ஓட்டங்களை குவித்து வெற்றியை பதிவுசெய்தது கொழும்பு ஸ்டார்ஸ்.
6 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட சீக்குகே பிரசன்ன 5 சிக்ஸர்கள் அடங்கலாக 32 ஓட்டங்களுடனும் ரதர்ஃபோர்ட் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக சீக்குகே பிரசன்ன தெரிவானார்.