அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் பரஸ்பர வரிகளைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தையின் போது ,அமெரிக்க அதிகாரிகள் சீனாவுடனான வர்த்தகத்தில் சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளனர் எனவும் இலங்கை தமது நடுநிலை கொள்கையை சுட்டி காட்டி குறித்த கட்டுப்பாடுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இலங்கையின் பிரதான ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகளில் மிகப்பெரிய குறைப்புகளைப் பெற்ற நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அமெரிக்க சந்தையில் நுழையும் இலங்கைப் பொருட்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்து, ஜனாதிபதி ட்ரம்ப் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதத்தை அனுப்பினார், இது ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 44 சதவீதத்திலிருந்து குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் போட்டியிடும் பங்களாதேஷ், மியான்மர், கம்போடியா மற்றும் லாவோஸ் போன்ற பிற நாடுகளை விட கட்டண விகிதம் குறைவாக இருப்பதால் இலங்கை தற்போது மகிழ்ச்சியாக உள்ளது.
எவ்வாறாயினும் ஆடை ஏற்றுமதியில் இலங்கைக்கு நேரடி போட்டியாளராக இருக்கும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு குறைந்த வரிகளை விதித்தத்தில் இலங்கை குழப்பத்தில் உள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் இலங்கைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வர்த்தக ஏற்றத்தாழ்வை டிரம்ப் எடுத்துரைத்துள்ளதோடு அது அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் செல்வாக்கு செலுத்துவது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.