டயகமயில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாதணிகளுக்காக வழங்கப்படும் வவுச்சர்களை மோசடி செய்த அதிபர் தொடர்பில் வலயக் கல்விப் பணிமனை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுச்சர்களை சில பாடசாலை அதிபர்கள் மோசடி செய்வதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சரிடம் இன்று நியூஸ்பெஸ்ட் வினவியது.
டயகம பகுதியில் பாடசாலையொன்றில் வவுச்சர்களைப் பெற்றுக்கொண்ட அதிபர் ஒருவர் அவற்றை விற்பனை செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இது குறித்து வலயக் கல்விப் பணிமனை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அக்கரப்பத்தனை பகுதியிலும் சில பாடசாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.