ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தை கண்டித்தும் அட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
சுதந்திர தாகத்தோடு அணைவரும் அணித்திரள்வோம் எனும் தொனிப்பொருளின் கீழ் பிடி தளராதே, சமூக செயல்பாட்டு மன்றம், மலையக மக்கள் இயக்கம், மலையக இளைஞர் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து 24.04.2022 அன்று இந்த போராட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பித்து, அதன்பின் ஊர்வலமாக வந்து அட்டன் மணிக்கூட்டு கோபுரத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில், இன்றைய போராட்டத்தில் கோ கோட்டா ஹோம், 200 வருட கூலித்தொழிலை இனியாவது சிறுதோட்ட உரிமையாளர்களாக ஆக்கு, சுபீட்சமான இலங்கையில் நாங்களும் இலங்கையர்களே, மலையக மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும், இனம், மதம் என பிரிக்க வேண்டாம் நாங்களும் இலங்கையர்களே, பட்டினியில் நாங்கள் பதவி வெறியில் நீங்கள் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தினர்.
அத்தோடு, கறுப்பு பட்டிகளை தலையில் அணிந்திருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
(க.கிஷாந்தன்)