“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி என்ற பதாதையை வெளியில் காண்பித்துக்கொண்டு, வெளிநபர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகளை வழங்கும் நடவடிக்கை மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சும் துணைநிற்கின்றது என்பதை மிகவும் உறுதியாக கூறிக்கொள்கின்றேன். இந்த இரகசிய கொடுக்கல் – வாங்கல்களை மூடிமறைப்பதற்காகவே மறுப்பறிக்கைகளும், ஊடக சந்திப்புகளும் இராஜாங்க அமைச்சின் சகாக்களால் நடத்தப்பட்டுவருகின்றன.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு……..
“ 1972 இல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகள் சுவீகரிக்கப்பட்டன.மாற்று குடியேற்றங்களும் இடம்பெற்றன. இதனால் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டன. அன்று மலையக மக்கள் சார்பில் செயற்பட்ட அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் செயற்பாட்டை கடுமையாக எதிர்த்தன. ஆனால் இன்று என்ன நடக்கின்றது? பெருந்தோட்டங்களை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்ட தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின், இராஜாங்க பிரிவானது காணிகள் பறிபோவதற்கு துணைநிற்பதுடன், வெளியாருக்கு காணிகளை வழங்குவதற்கு தரகர் வேலையும் பார்க்கின்றது.
இதனை தடுத்து நிறுத்தி, எமது மக்கள் வளமாக்கிய மண்ணை அவர்களுக்கே சொந்தமாக்கி, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர் என்ற நிலைக்கு கொண்டுவருவதற்கு நாம் பாடுபடு கின்றோம். இதனை சகித்துக்கொள்ள முடியாததாலும், தரகுப்பணம் கிடைக்காது என்பதாலுமே தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் சகாக்கள், இன்று கொக்கரிக்க ஆரம்பித்துள்ளனர். எதுவுமே நடக்கவில்லை, எதிரணி உறுப்பினர் கூறுவதெல்லாம் பொய்யென அறிக்கைகளையும் விடுத்துவருகின்றனர்.
அரச பெருந்தோட்ட யாக்கத்துக்குட்பட்ட பயிரிடப்படாத நிலங்களை, விவசாய நடவடிக்கைக்கு விடுவிக்குமாறு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சின் இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமானே செயற்படுகின்றார். அதாவது தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க என்ற போர்வையில் அவர்களுக்கு 10 பேர்சஸ் காணியை வழங்கிவிட்டு, ஏனையவற்றை வெளியாருக்கு விற்பனை செய்வதே இதன் உள்நோக்கமாக இருக்கின்றது.
எனவே, இவ்வாறானவர்களின் சதி முயற்சிகளை முறியடித்து எமது காணியை எம்மக்களுக்கே பரித்துக்கொடுப்பதற்கான திட்டம் வெற்றியளிக்க ஓரணியில் திரள்வோம் என மலையகத்திலுள்ள அனைத்து சிவில் மற்றும் நலன்புரி அமைப்புகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அதேபோல மக்களுக்காக மக்கள் அரசியலை முன்னெடுக்கும் நாம் சட்டத்தை மதிக்கின்றோம். மனசாட்சியின் பிரகாரம் செயற்படுகின்றோம். எத்தடை வரினும் அவற்றை தகர்த்தெறிந்துவிட்டு மக்களுக்காக முன்னோக்கி பயணிப்போம். எனவே, பூச்சாண்டி அரசியல்மூலம் எம்மை கட்டுப்படுத்த முடியாது.- என்றுள்ளது.