சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சின்னத்திரையில் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் யாரென்றே தெரியாதவர்களாக இருந்தாலும் சீசன் முடிந்து அவர்கள் வெளியில் செல்லும்போது பெரிய ரசிகர் கூட்டத்துடன் தான் செல்கின்றனர்.
அதன்படி தற்போது சூப்பர் சிங்கர் 8வது (Super Singer 8) சீசன் நடைபெற்றது. இதில் வெற்றியாளரை தேர்வு செய்வதற்கான போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இந்த சூப்பர் சிங்கர் 8வது சீசன் போட்டியில் அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி ஆகிய ஆறு பேர் ஃபினாலே போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.
கடந்த செப்டம்பர் 24 ம் தேதி துவங்கி மொத்தம் 9 மணி நேர நிகழ்ச்சியாக இந்த கிராண்ட் ஃபினாலே நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு துவங்கி, தொடர்ந்து 6 மணி நேர ஷோவாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த போட்டியில் நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள், எஸ்பிபி சரண் ஆகியோர் இருந்துனர். மேலும் இந்த நிகழ்ச்சியை மகாபா ஆனந்த்தும், பிரியங்காவும் தொகுத்து வழங்கினர்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டார். இவர்கள் தவிர பிரபல இசை பாடகர்களான சித்ரா, மால்குடி சுபா, அனந்த் வைத்தியநாதன், கல்பனா, தீ, சந்தோஷ் நாராயணன், ஹரிஷ் கல்யாண், செஃப் தாமு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 33 லட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று சூப்பர் சிங்கர் 8வது சீசன் டைட்டில் வின்னர் ஆக ஸ்ரீதர் சேனா ஆகி உள்ளார். மேலும் அவருக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பரத் இரண்டாவது இடத்தையும், அபிலாஷ் மூன்றாவது இடத்தையும் வென்றுள்ளனர்.