உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உலகப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் உறுதியற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நாடு தனது சொந்த பொருளாதார முன்னுரிமைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியப் பொருட்களின் இறக்குமதிக்கு 25% வரியும், ரஷ்ய இராணுவ உபகரணங்கள் மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு குறிப்பிடப்படாத “அபராதமும்” அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை “செத்த பொருளாதாரம்” என்று அழைத்த சில நாட்களுக்குப் பிறகு மோடியின் கருத்துக்கள் வெளி வந்துள்ளன.
சனிக்கிழமை தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மோடி, “பொருளாதார முன்னேற்றம் பற்றி நாம் பேசும்போது, தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். உலகப் பொருளாதாரம் உறுதியற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கிறது.
இதுபோன்ற காலங்களில், நாடுகள் தங்கள் சொந்த நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இந்தியாவும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது, மேலும் அதன் சொந்த பொருளாதார முன்னுரிமைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.
“இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற வேண்டும் என்றால், ஒவ்வொரு கட்சியும், தலைவரும், குடிமகனும் உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிக்க பாடுபட வேண்டும்” என்று வலியுறுத்தி, பிரதமர் ‘சுதேசி’க்கு (உள்நாட்டு உற்பத்தி) மீண்டும் ஒரு உந்துதலையும் வழங்கினார்.
வர்த்தகர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு விசேட வேண்டுகோள் விடுத்த பிரதமர், “உலகம் நிச்சயமற்ற தன்மையைக் கடந்து செல்லும் நேரத்தில், நமது கடைகள் மற்றும் சந்தைகளில் இருந்து சுதேசிப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய உறுதிமொழி எடுப்போம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஊக்குவிப்பது நாட்டிற்கு உண்மையான சேவையாக இருக்கும்” என்றார்.