செந்தில் தொண்டமானுக்கு வேலுகுமார் பதிலடி.

0
141

அறிக்கைகளை விடுத்து சமாளித்து, அரசாங்கத்தை பாதுகாக்கும் முயற்சியை கைவிடுத்து, மக்களின் பிரச்சினைகளை தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு பிரதம அமைச்சரின் பெருந்தோட்ட இணைப்பாளரான செந்தில் தொண்டமான் முன்வர வேண்டும். எனவே, நாகஸ்தன்ன தோட்ட பிரச்சினையையும் திசைதிருப்பி – மூடிமறைக்க முற்பட வேண்டாம் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின்கீழ் இயங்கும் நாகஸ்தன்ன தோட்டத்திலுள்ள 700 ஏக்கர் காணியை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் இடம்பெற்றுவருகின்றன என சுட்டிக்காட்டி, அது தொடர்பான தகவல்களை வேலுகுமார் எம்.பி. அம்பலப்படுத்தியிருந்தார்.

இதனை மறுத்து பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளரும், இதொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமானால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் வேலுகுமார் எம்.பியால் இன்று (04.09.2021) விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாகஸ்தன்ன தோட்டப் பகுதியில் காடாக இருந்த காணிகள், வெளியார் உற்பத்தி (அவுட்குரோ) முறைமையின்கீழ் அப்பகுதி தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. வெறும் காணி மட்டுமே வழங்கப்பட்டது. இந்நிலையில் காட்டை சுத்தம் செய்து, தேயிலை கன்று நட்டு , உரம் போட்டு , வியர்வை – உதிரம் சிந்தியே தரிசு நிலத்தை எம்மக்கள் வளமாக்கினர். ஒப்பந்த அடிப்படையில் தோட்ட நிர்வாகத்துக்கு கொழுந்தையும் வழங்கிவந்தனர்.

நிலைமை இவ்வாறிருக்க ஒப்பந்தகாலம் முடிந்துவிட்டது என போலிக்கதைகூறி, தொழிலாளர்களிடமிருந்து காணியை பறிந்து சுமார் 700 ஏக்கரை தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பதற்கான முயற்சி மிகவும் சூட்சுமமான முறையில் இடம்பெற்றுவருகின்றது. இதற்கான அளவீட்டுப்பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றபோது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர் எனவே, இந்த போராட்டம் ஏன் இடம்பெற்றது என்பதை செந்தில் தொண்டமான் தேடி பார்க்க வேண்டும்.

போராட்டத்தை முன்னின்று நடத்திய தோட்ட தலைவர்களுக்கு இன்றளவிலும் நிர்வாகம் இடையூறுகளை ஏற்படுத்துவது ஏன்? விவசாயம் செய்தவர்கள்கூட பரிதவிக்கும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, இதன் பின்னணியில் உள்ள சூட்சுமங்களையும், விற்பனைக்காக முன்னெடுக்கப்படும் நகர்வுகளையும் ஆராய்ந்து பார்க்காமல், எடுத்த எடுப்பிலேயே வழமைபோல அரசாங்கத்தை பாதுகாக்கும் விதத்தில் செந்தில் தொண்டமான் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல இதன் பின்னணியில் செயற்படும் சூத்திரதாரிகள் என எம்மால் அடையாளப்படுத்தப்பட்ட தரப்புகளிடம் இருந்து கடிதம் பெற்று, அதனையும் வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே எமது மக்களின் உரிமைக்காக போராடுவோம் என அடிக்கடி சூளுரைக்கும் செந்தில் தொண்டமான், நாகஸ்தன்ன விவகாரத்தில் இதனை நிரூபித்துக்காட்ட வேண்டும்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகள் எமது மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் .அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். இதற்காக முயற்சியை நல்லாட்சியின்போது நாம் மேற்கொண்டோம். அதனை முன்னோக்கி நகர்த்துவதைவிடுத்து, வழங்கிய காணியையும் பறிக்கும் முயற்சிக்கு துணை நிற்கக்கூடாது.” -என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here