அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி ஆறு போட்டிகள் கொண்ட இருதரப்பு வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடருக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (29) அறிவித்தது.
இந்தத் தொடரில் ஐந்து T20I போட்டிகளும், ஒற்றை ஒருநாள் போட்டியும் அடங்கும். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி T20I போட்டியுடன் இந்தத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் அனைத்துப் போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் உள்ள சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன. அதே நேரத்தில் ஒருநாள் போட்டி செப்டம்பர் 29 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டித் தொடர் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் படி, இந்த சுற்றுப்பயணம் இளம் வீராங்கனைகள் சர்வதேச அளவில் திறமைகளை வெளிப்படுத்தவும், அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதிலும், இளைஞர் மேம்பாட்டு பாதையை வலுப்படுத்துவதிலும் இந்தத் தொடர் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.