தொடருந்தின் முன்னால் நின்று செல்பி எடுத்த தாய் மற்றும் மகள் அந்த தொடருந்து மோதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அநுராதபுரம்(anuradhapura) பகுதியில் நேற்று(22) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இரத்தினபுரி(ratnapura) பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அநுராதபுரத்தில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர்.
இதன்போது அநுராதபுரம் தொடருந்து நிலையத்தின் முன்பாக செல்பி எடுக்க சென்றுள்ளனர். அவ்வேளை காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிவேகதொடருந்தின் முன் செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இருவரின் உயிரிழப்பு அவர்களது உறவுகளிடையே கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.அண்மைக்காலமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓடும் தொடருந்தில் செல்பி எடுக்க முயன்று தவறிவீழ்ந்து படுகாயமடைந்த சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.