வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாய்க்குட்டியை திருடிய நபர் ஒருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த நாய்க்குட்டியின் பெறுமதி சுமார் ஐம்பதாயிரம் ரூபா என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாணந்துறை பெக்கேகம பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது வீட்டில் நாய்க்குட்டியை திருடியதாக அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் கொரல்வெல்ல பகுதியிலுள்ள வீடொன்றுக்கு 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மற்றுமொரு நபருடன் இணைந்து நாய்க்குட்டியை திருடியுள்ளதாகவும், தற்போது வேறு ஒரு வழக்கு தொடர்பில் அவர் சிறையில் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாய்க்குட்டியை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் சந்தேகநபர்கள் போதைப்பொருள் உட்கொண்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சந்தேக நபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.