சேதனை பசளையினை பயன்படுத்தி மலையகத்தில் விவசாயத்தினை மேற்கொள்ள ஆலோசனையும் வழிகாட்டல்களையும் அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும் மலையக விவசாயிகள் கோரிக்கை.
அரசாங்கம் இரசாயன உர பயன்பாட்டினை திடீரென தடை செய்ததன் காரணமாக மலையகத்தில் விவசாயத்தில் ஈடுபடும் பலர் செய்வதறியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஒரு சிலர் எவ்வாறாயினும் தனது விவசாயத்தினை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று எண்ணியும் எதிர்கால சந்தததியினர் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று எண்ணியும் சேதனை பசளை உற்பத்தியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு சேதனை பசளை உற்பத்தியில் ஈடுபடும் மலையக விவசாயிகளுக்கு முறையான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கி அரசாங்கம் அவர்களை ஊக்கு விக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இதே நேரம் பெரும்பாலான விவசாய நிலங்கள் இரசாயன உரம் கிடைக்காததன் காரணமாக பயிர்கள் மற்றும் விவசாயம் அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அதிகமான விவசாயிகள் தங்களது தங்க நகைகளை அடகு வைத்தும் கடன்களையும் பெற்றும் விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ளதனால் விவசாயத்தில் பயன்பெற முடியாது பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
எனவே அரசாங்கம் முற்று முழுவதுமாக இராசாய உரத்தினை தடை செய்யாது செயற்கை பசளை போதுமான அளவு உற்பத்தி செய்து கொள்ளும் வரையிலாவுது இரசாயன பசளையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லா விட்டால் பாரிய சிரமத்திற்கு மத்தியில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் இந்த துறையினை கைவிட வேண்டிய நிலை உருவாகும் என இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எது எவ்வாறான போதிலும் இராசயன பயன்பாட்டிலிருந்து விலகுவதன் மூலம் நல்ல ஒரு ஆரோக்கியமான பாரம்பரிய விவசாய முறையினை கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மலையக பகுதியிலும் முன்னெடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். அவ்வாறு செய்யும் பட்சத்தில் சூழல் மாசு அடைவதனையும் நீர் நிலைகள் அசுத்தமடைவதனையும் தவிர்த்து கொள்ளலாம் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். இதே வேளை பசளையின்றி விணாகும் விவசாய நிலங்களுக்கு அரசாங்கம் உடனடியாக ஏதாவது செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்