நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 134 ஓட்டங்களை எடுத்தது.
அதிகபட்சமாக ஜேம்ஸ் நீஷம் 48, தலைவர் மிட்செல் சாண்ட்னர் 23, ஆடம் மில்ன் 16, டேரில் மிட்செல் 14 ஓட்டங்களை எடுத்தனர். பங்களாதேஷ் தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்களையும் மெஹிதி ஹசன், முஸ்டாபிஸுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 137 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லிட்டன் தாஸ் 40, சவுமியா சர்க்கார் 22, நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 19, தவுஹித் ஹிர்டோய் 19, மெஹிதி ஹசன் 19 என்ற அடிப்படையில் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். டி 20 போட்டிகளில் நியூஸிலாந்து மண்ணில் பங்களாதேஷ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இதற்கு முன்னர் நியூஸிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக 9 ஆட்டங்களில் விளையாடி பங்களாதேஷ் தோல்வி கண்டிருந்தது. தற்போதைய வெற்றியால் 3 ஆட்டங்கள் டி 20 தொடரில் வங்கதேச அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.