‘ஜனநாயகன்’ படத்தின் தமிழக உரிமை வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. இப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது. இதன் தமிழக உரிமை யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. முதலில் இப்படத்தின் உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றி இருந்தார். தற்போது, அவர் கூறிய மாதிரி பணத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அவர் தவிர்த்து தமிழக உரிமையினை யாருக்கு வழங்கலாம் என்ற பேச்சுவார்த்தையில் படக்குழு இறங்கியிருக்கிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ பாணியில் ஒவ்வொரு ஏரியா உரிமையினையும் தனித்தனியாக வாங்கிவிடலாம் என்று விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள். ஆனால், தமிழக உரிமையினை ஒட்டுமொத்தமாக ஒருவரிடம் தான் வழங்க வேண்டும் என்ற முடிவில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது.
ஏனென்றால், ஒட்டுமொத்த தமிழக உரிமை விற்பனையின் மூலம் சுமார் ரூ.100 கோடி வரை எதிர்பார்க்கிறது தயாரிப்பு நிறுவனம். தனித்தனியாக விற்பனை செய்தால் இந்தப் பணம் வருமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் என்பதால் ஒட்டுமொத்த உரிமையும் ஒருவருக்கே என்ற நிலையில் இருக்கிறார்கள். இதனால் ’ஜனநாயகன்’ உரிமை யாருக்கு என்பது விரைவில் தெரியவரும்.
HinduTamil




