நடைமுறையில் காணப்படுகின்ற அரசியலமைப்பு முறைக்கமைய, ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு அரசியலமைப்பில் எந்தவித தடையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.நுவரெலியாவில் 20.08.2018 அன்றைய தினம் இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் மீண்டும் இந்த பிரச்சினை எழுந்துள்ளது. நாட்டில் ஜனாதிபதி பதவிக்காலம் குறித்த வரலாற்றை நோக்குமிடத்து, புதிதாக கொண்டுவரப்பட்ட 19ஆவது அரசியல் சீர்திருத்தத்தில் மாற்றியமைக்கப்பட்ட சீர்திருத்தத்திற்கமைய ஒரு ஜனாதிபதியின் பதவிகாலம் 5வருடங்கள் என தெரிவிக்கப்பட்டது.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு அமைவாகவேயே முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் ஆட்சிபுரிந்தனர்.
அன்று ஜனாதிபதி பிரதமர் உட்பட அரச தரப்பில் அனைத்து பதவிகளுக்கும் நபர்களை நியமிக்கும் பொறுப்பு கொண்டிருந்ததோடு, அரசியலமைப்புனூடாக நாடாளுமன்றுக்கு பொறுப்பு கூற வேண்டிய தேவை இன்மை மற்றும் நாடாளுமன்றத்தினை களைக்க என பலங்கள் கொண்டிருந்தார்.
எனினும் நடைமுறையிலுள்ள ஜனாதிபதிக்கு அவ்வாறான பலங்கள் இல்லை. 19ஆம் அரசியலமைப்பின் கீழ் நாட்டின் ஜனாதிபதியாகும் நபர் மீண்டும் இரண்டாவது முறையாக பதவியிலிருக்க முடியாது என 31ஆவது பிரிவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய பிரிவில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அன்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச பெற்ற ஜனாதிபதி பதவியும் இன்று மைத்தரிபால சிறிசேன பெற்ற பதவியும் வோறானதாகும்.
அதனை மிகத் தெளிவாக பார்த்து தெரிந்துக் கொள்ளுமிடத்து தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு தேவையாயின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச நடைமுறையிலுள்ள ஜனாதிபதி பதவிக்கு தேர்தலில் போட்டியிடலாம்.
நாட்டில் ஒரு சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு வாக்குகளை வழங்கவும் சிலர் மஹிந்தவுக்கு வாக்குகளை வழங்கவும் தயாராகவேயே உள்ளனர். இந்நிலையில் நாட்டில் வாக்குரிமையுள்ள அனைத்து மக்களும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தமது பிரதான மனித உரிமைகள் தொடர்பில் வித்தியாசமென்றினை பெற வேண்டும் என நாம் நம்புகின்றோம்.
நாட்டில் 35 வயதிற்கு மேலானவர்கள் மாத்திரமே முச்சக்கரவண்டிகளை செழுத்த முடியும் என கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானமானது நாட்டின் இளைஞர்களுக்கு மேற்கொள்ளும் அசாதாரணமான விடயமாகும்.
நான் திறன்கள் அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றிய போது முச்சக்கர வண்டி ஓட்டுநனர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி தச்சாளர், மின்னியல் வல்லுனர், மற்றும் நீர்பொறியியலாளர் என வேலைவாய்ப்புக்களை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதும் அது மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அவர்களுக்கான மாற்று வழிகளை ஏற்பாடு செய்யாது, இவ்வாறு முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கான வயதெல்லையாக 35 வயதாக உயர்த்துவது அசாதாரணமான செயற்பாடாகும்.
இந்த செயற்பாடு நாட்டின் இளைஞர்களை வீணாக்கும் ஒரு செயற்பாடு என அரசாங்கத்திடம் தெரிவிக்க விரும்புகின்றதோடு, நாட்டு இளைஞர்களையும் இதற்கு எதிரான ஒன்றிணையுமாறு வேண்டிக்கொள்வதோடு, இளைஞர்கள் வாழக்கூடிய ஒரு வழிமுறையினை ஏற்படுத்திக்கொடுக்கும் செயற்பாடுகளை வெற்றிகரமாக செயற்படுத்தவேண்டும் என அரசாங்கதிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
(க.கிஷாந்தன்)