ஜனாதிபதி உரிமைகளை ரத்துச் செய்யும் நகல் சட்டமூலத்தின் மீதான உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பரிந்துரைகளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளார்.
உரிமைகளை ரத்தாக்கும் நகல் சட்டமூம் அரசியல் யாப்புக்கு முரணானது என குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
நகல் சட்டமூலத்தை பரிசீலித்த ஐந்து நீதியரசர்களும் தமது பரிந்துரைகளை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர். செவ்வாய்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது பிரிந்துரைகளை சபாநாயகர் சபையில் வாசிப்பார்.
குறித்த நகல் சட்டமூலத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டும் என நீதியரசர்கள் பரிந்துரைத்திருந்தால், அத் திருத்தங்கள் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.
வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் குறித்த நகல் சட்டமூலம் ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவர்களின் மனைவிமார்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அதிகாரபூர்வ மாடி மனைகள், மாதாந்த கொடுப்பனவுகளை உள்ளிட்ட பல சலுகைகளை ரத்துச் செய்ய வேண்டு என தயாரிக்கப்பட்ட நகல் சட்டமூலம் அரசியல் யாப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது