மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது.
இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் ஸ்தம்பித்தன. இந்நிலையில் இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார். இதன்படி விரைவில் பணி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஷ்வரன், வீ.இராதாகிருஷ்ணன், எஸ்.பி. திஸாநாயக்க, சீ.பீ ரத்னாயக்க ஆகியோரும், ஜனாதிபதி செயலாளர், மாகாண ஆளுநர், அரச அதிபர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தற்போது ஸ்தம்பித நிலையில் உள்ள அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி, வசந்தகால பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளன.