ஜெனிவா பாலின சமத்துவத்தில் மைல்கல் முன்னேற்றத்தை வெளிக்காட்டிய இலங்கை!

0
60

இலங்கை பாராளுமன்றத்தின் தூதுக்குழு 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி ஜெனிவாவில் நடந்த 151வது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) மாநாட்டில் நடைபெற்ற பாலின சமத்துவம் குறித்த கூட்டத்தில் பங்கேற்றது. IPU இன் பாலின கூட்டாண்மைத் திட்டத்தின் (Gender Partnership Programme) கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், பாராளுமன்றங்களுக்கிடையே பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதில் உள்ள அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் சவால்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பெனின், பூட்டான், புர்கினா பாசோ, சாட், காம்பியா, நமீபியா, சியரா லியோன், இலங்கை, துருக்கி மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா அவர்கள் இங்கு உரையாற்றியதுடன், 2024 இல் நாட்டில் ஏற்பட்ட வரலாற்று ரீதியான மாற்றத்தைத் தொடர்ந்து, பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பதில் இலங்கையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் வகையிலான ஊக்கமளிக்கும் உரையை அவர் நிகழ்த்தினார். இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட அரசியல் பின்னணியை வடிவமைப்பதில் பெண்கள் ஆற்றிய முக்கியப் பங்கை அவர் வலியுறுத்தியதுடன், ஒரு தேர்தலில் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை சுமார் 5% இலிருந்து 10% ஆக குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்திய “பெண்கள் நாம் ஒன்றாக” என்ற நாடு தழுவிய இயக்கம் பற்றிய விடயங்களையும் பகிர்ந்து கொண்டார். “இலங்கையின் கதை ஒரு எளிய உண்மைக்குச் சான்றாகும்: பெண்கள் வலுவூட்டப்பட்டால், முழு நாடும் உயரும். எந்தக் கனவும் மிகப் பெரியதல்ல, எந்தப் பதவியும் எட்ட முடியாததல்ல என்ற ஒரு தெளிவான செய்தியை எங்கள் மகள்களுக்கும், உலகிற்கும் நாங்கள் அனுப்புகிறோம்.” என்று பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா அவர்கள் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இலங்கைத் தூதுக்குழுவில் கலந்துகொண்டதுடன், அவரது பங்கேற்பு இலங்கையின் மிக உயர்ந்த சட்டமியற்றும் நிறுவனத்துக்குள் பெண்களின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.

இலங்கைத் தூதுக்குழுவின் பங்களிப்பை IPU பாராட்டியதுடன், பாராளுமன்றங்களில் பாலின சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் அணுகல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில் இலங்கையின் செயற்பாட்டு ரீதியான பங்கை அங்கீகரித்து, ஒரு உத்தியோகபூர்வ பாராட்டு கடிதம் மூலம் தனது நன்றியைத் தெரிவித்தது.

இந்த உயர்மட்ட உரையாடலில் இலங்கையின் பங்கேற்பு, பாலின சமத்துவத்தை வலுப்படுத்துவதற்கும், சட்டமியற்றும் செயன்முறைகளில் பெண்களின் குரலை அதிகரிப்பதற்கும் நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. மிகவும் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கான பொதுவான அர்ப்பணிப்புக்களை உறுதியான செயலாக மாற்றுவதற்கு IPU மற்றும் ஏனைய உறுப்பு நாடுகளுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராளுமன்றம் எதிர்பார்க்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here