இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு எதிர்க்கட்சியால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அந்தக் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) ஜெனீவா தீர்மானம் தொடர்பில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் உரையைத் தொடர்ந்து எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்கவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஜெனீவா தீர்மானம் தொடர்பான அமைச்சரின் விசேட உரையைத் தொடர்ந்து, குறித்த தீர்மானம் தொடர்பில் ஜெனீவாவில் வாக்கெடுப்பை கோராமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். இதன்போது சபையில் சர்ச்சை நிலைமையும் ஏற்பட்டிருந்தது.
இவ்வேளையில், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாதிலக கூறுகையில்,
‘‘வெளிவிவகார அமைச்சர் வழங்கிய பதில்களை வரவேற்கின்றோம். ஐ.நாவில் இலங்கைப் பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக்கவின் உரையையும் நான் வரவேற்கின்றேன். ஆனால் அப்போது ஏன் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பை கோரியிருந்தால் உலக நாடுகள் எங்களுடன் இருக்கின்றது என்பதனை உறுதிப்படுத்த முடியுமாக இருந்திருக்கும்’’ என்றார்.
இதன்போது பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், ‘‘எனது உரையில் அதற்கான காரணத்தை விரிவாக முன்வைத்துள்ளேன். அதனை நீங்கள் புரிந்துகொள்ளாமல் இவ்வாறு கேள்வி கேட்கின்றீர்கள்’’ என்றார்.
இவ்வேளையில் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எழுந்தபோது, ‘‘இந்த விடயத்தில் ஒழுங்குப் பிரச்சினை என்ன?’’ என்று சபாநாயகர் கேட்டார். இதன்போது தனது கருத்தை முன்வைத்த சாணக்கியன் எம்.பி, ‘‘நான் எனது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியே இங்கே வந்துள்ளேன். இதனை விடுத்து பாராளுமன்றத்தில் பூனை, எலிகளைப் பிடிக்க வரவில்லை. அமைச்சர் முக்கிய விடயத்தை கூறியுள்ளார். அது தொடர்பில் கேள்வியெழுப்பும் உரிமையை வழங்குங்கள். அதனை தடுக்க வேண்டாம். வெளிவிவகார அமைச்சர் ஏன் உங்களின் உரையில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் குறிப்பிடவில்லை’’ என்று கூறிக்கொண்டிருந்தபோது அவரின் ஒலிவாங்கி முடுக்கிவிடப்பட்டது.
இதன்போது மீண்டும் அமைச்சர் விஜித்த ஹேரத் பதிலளித்துக் கூறுகையில், ‘‘நான் ஜெனீவா உரையில் மாகாண சபைத் தேர்தல் குறித்து எமது நிலைப்பாட்டை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்’’ என்றார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறுகையில்,
‘‘ஏன் நீங்கள் வாக்கெடுப்புக்கு அச்சமடைய வேண்டும். அவ்வாறு அச்சமடைவது நல்லதல்ல. ஜீ.எஸ்.பி. விடயத்தில் நாங்கள் வாக்கெடுப்பை கோரினோம். அப்போது எங்களுக்கு 400 வாக்குகளும் எங்களுக்கெதிராக 100 வரையிலான வாக்குகளும் கிடைத்தன’’ என்றார்.
இதேவேளை, எதிர்க்கட்சி பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க கூறுகையில்,
‘‘வெளிவிவகார அமைச்சரின் இந்த உரை தொடர்பில் நாங்கள் விவாதமொன்றை கோருகின்றோம்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித்த ஹேரத், ‘‘ஜெனீவா தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்துவதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அந்த விவாதத்தில் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்’’ என்றார்.