தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆங்கில செய்தி சேனல் சென்னையில் அரசியல் நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அந்த செய்தி நிறுவனம் சார்பில் தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேவேளை, வீட்டிற்கு நேரில் வந்து பேட்டி எடுக்கும்படி விஜய் கேட்டுக்கொண்டதையடுத்து தனியார் நிறுவன செய்தியாளர்கள் நேரில் சென்று விஜய் இடம் பேட்டி எடுத்தனர்.
அப்போது விஜய் இடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்தார்.
பேட்டியில் விஜய் கூறியதாவது,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வலியில் இருந்து இன்னும் என்னால் மீண்டுவர முடியவில்லை. இதுபோன்று நடைபெறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
ஜனநாயகன் பட விவகாரத்தில் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவது எனக்கு கவலையை அளிக்கிறது. அரசியலுக்கு வருவதால் நான் நடித்த படம் குறிவைக்கப்படும் அல்லது வேறு எதேனும் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். அதை எதிர்கொள்ள நான் தயாராகவே இருந்தேன்.
நான் ஷாரூக்கானின் ரசிகன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தான் என் ரோல் மாடல். அரசியலில் நான் கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை. தேர்தலில் நான் வெற்றிபெறுவேன். நான் ஏன் கிங் மேக்கராக இருக்க வேண்டும்?
நான் பல ஆண்டுகளாக சினிமா நட்சத்திரமாக இருந்துள்ளேன். ஆனால், தற்போது அரசியல் செய்ய எனது மனநிலையை தயார்படுத்திவிட்டேன். இந்த மாற்றம் சுலபமாக நடக்கவில்லை. கடினமாக இருந்தது.




