மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதி ஊர்வலம், ஜே.வி.பியின் ஆகக்கூடிய கௌரவத்துடன் இடம்பெறும் என்று கட்சியின் அரசியற்சபையின் உறுப்பினர் கே.டி லால்காந்த தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து முரண்பாடுகள் காரணமாக கட்சியிலிருந்து விலகிய சோமவன்ச அமரசிங்க, முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் மரணத்துக்குப் பின்னர், கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவது முதல், கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வரையிலும், விசேடமான செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
அவர், இந்நாட்டின் ஏனைய அரசியல்வாதிகள் போல் அல்லாது, ஒவ்வொரு தருணத்திலும் மக்களுக்காகப் போராடினார்.
மக்களின் உரிமைகளுக்காக முன்னின்றார். அவ்வாறான தலைவருக்கு, கட்சியின் தலையீட்டுடன் இறுதி ஊர்வலம் முன்னெடுக்கப்படும்.
அவருக்கு, ஆகக்கூடிய கௌரவம் அளிக்கப்படும் என்றார். இதேவேளை, தன்னுடைய பேஸ்புக்கில் பதிவொன்றை செய்துள்ள கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமா திஸாநாயக்க, ‘தாய்நாட்டின் கௌரவத்துக்காக அர்ப்பணித்து போராடிய எங்கள் தலைவருக்கு, எங்கள் சிரந்தாழ்ந்த கௌரவம் உரித்தாகட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமரசிங்கவின் இறுதி ஊர்வலம், எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.