டன்சினன் தோட்டத்தில் 400 வீடுகளை அமைக்க வித்திட்டது காங்கிரஸ் சிவலிங்கம் பெருமிதம் !

0
240

பெருந்தோட்டப்பகுதிகளில் கல்வி மற்றும் மாற்று தொழில்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த கூட்டு ஒப்பந்தத்தின் போது தோட்ட தொழிலாளர்களின் தொகை ஒரு இலட்சத்து என்பதாயிரம் என தெரிவித்த கம்பனிகள் இப்போது தொழிலாளர்களின் தொகை வெறும் 90 ஆயிரம் என தெரிவித்துள்ளனர்.இதனடிப்படையில் மலையக தோட்டப்பகுதிகள் மாற்றமடைந்து தனக்கு தானே வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ளும் வகையில் மாற்றம் பெற்றுள்ளனர் என சிறு கைத்தொழில் பிரதி அமைச்சரும், இ.தொ.கா போசகருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இ.தொ.காவின் மறைந்த தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 105வது ஜனன தினத்தையொட்டி கொட்டகலை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் மலையக பிரதேசங்களில் இன்று கிராமத்திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். இதற்கு வித்திட்டவர் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா என்பதை மறந்துவிட முடியாது.

1972 ஆம் ஆண்டு நாட்டு தோட்டங்கள் 50 ஏக்கர்களாக பிரிக்கப்பட்டது. இதன் போது கண்டி பிரதேசத்தில் புஸ்ஸலாவை பகுதியில் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தில் தோட்டங்கள் பல பெறப்பட்டது.

இதன்போது நமது மக்களின் உரிமைகள் பரிக்கப்படுவதற்கு மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டார்.

இவரின் செயற்பாட்டால் மலையக தமிழ் மக்கள் சக்தி வலுவடைகிறதை கட்டுப்படுத்த அன்றைய அமைச்சர் டென்சில் கொப்பேகடுவ தலைவர் தொண்டமானை அந்தமானுக்கு அனுப்புவதாகவும் கூறினார் ஆனால் அது முடியவில்லை.

பின் ஸ்ரீமா அரசு சமாதானம் பேசும் போது தோட்டங்களை எடுத்தால் எனது வீட்டையும் சேர்த்தே எடு என வீரத்துடன் தெரிவித்தார். அத்தோடு எனது மக்களின் உரிமையை எவரும் பறித்தெடுக்க இடமளிக்கமாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அன்று தக்கவைத்து கொண்ட இடங்களில் இன்று மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். அதேவேளையில் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் 402 வீடுகளை அமைத்து கிராமம் ஆக்குவதற்கு வித்திட்டதும் காங்கிரஸ் என்பதையும், இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வீடுகள் அமைக்க இடமும், பணமும் பெற்று கொடுக்க காங்கிரசும், ஆறுமுகம் தொண்டமானும் முன்னின்டனர் என்பதையும் டன்சின் மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

ஒருகாலத்தில் உரிமைகளுக்காக காத்திருப்பதும் ஏங்கியிருப்பதுமான நிலையில் இந்த நாட்டில் வாழ்ந்த நமக்கு சரியான எதிர்காலத்தை காட்டி கல்வியிலும் முன்னேற்றமடைய செய்த அந்த மகானை என்றென்றும் மலையக மக்கள் மறந்துவிட மாட்டார்கள் என சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவை சுட்டிகாட்டி பேசிய அவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவின் வாழ்க்கை பெறுமைகளையும் புகழ்ந்தார்.

அத்துடன் கடந்த உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தான் சுகவீனம் அடைந்திருந்த காலப்பகுதியில் காங்கிரஸை பலப்படுத்தி வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர் எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் காங்கிரஸையும் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் கரத்தையும் பலப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

சிலர் காங்கிரஸையும் தலைவர் தொண்டமானையும் விமர்சிக்காமல் அரசியல் செய்யமுடியாதுள்ளனர். இன்றைய தினத்திலும் பல பொருட்கள் வழங்கப்படுகிறது. பொருட்கள் வழங்கி அரசியல் செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ்க்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஐயாவின் ஜனன தினத்தில் மக்களுக்கு தேவையான பொருட்களும், சேவைகளும் அன்பளிப்பாக வழங்குவது கொள்கை என அவர் மேலும் தெரிவித்தார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here