டயகமவில் ஆபிரஹாம் சிங்கோ புரம்- யார் இந்த ஆபிரஹாம் சிங் ?

0
198

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்காக மலைநாட்;டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய வீடமைப்புத்திட்டத்தின் இரண்டாவது கிராமம் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

மலையகத்திற்கான இந்திய வீடமைப்புத்திட்டமானது 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோதும் அதன் கட்டுமான பணிகள் 2016 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரத்தொடங்கியது. அந்தவகையில் முதலாவது தொகுதியான 4000 வீடுகளில் 1134 வீடுகள் முறையே நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் பூண்டுலோயா – டன்சினன், கொத்மலை- ஹெல்பொட, பொகவந்தலாவை –பொகவான, பதுளை நாரங்கல்லை, அகரபத்தனை- டயகம ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது. இரண்டாம் கட்டமாக 2866 வீடுகளும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம் பெற்றுவருவதுடன், அடுத்த தொகுதியான 10000 வீடுகளுக்கான உடன்படிக்கை இந்திய உயர்ஸதாணிகர் தரஞ்ஜித் சிங் சந்து, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு இடையே முதலாவது வீடமைப்புத்திட்ட திறப்பு விழாவின்போது டன்சினன் மகாத்மாகாந்திபுரத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அவற்றின் நிர்மாணப்பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் முதலாம் தொகுதியின் இரண்டாவது கிராமமம் இன்று நுவரெலியா மாவட்டத்தின் டயகம மேற்கில் ‘ஆப்ரஹாம் சிங்கோபுரம்’ எனும் பெயரில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது

150 தனிவீடுகளைக்கொண்ட மலைநாட்டு பதிய கிராமமாகும். வீடமைப்புக்கான நன்கொடையை இந்திய அரசாங்கம் வழங்க அததகைய வீடுகளுக்கான தலா எழுபேர்ச்சஸ் காணிகள் இலங்கை அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கான முழுமையான காணி உறுதிகளும் இன்று வீட்டு உரிமையாளர்களுக்கு கையளிக்கப்படவுள்ளது. தனிவீடுகளுக்கான நிதியினை இந்திய அரசாங்கம் வழங்க, தள அமைப்பு பணிகள், வீடமைப்புத் திட்டத்திற்கான பிரதான பாதை வீடமைப்புத்திட்டத்துக்கு உள்ளேயான சிறுபாதைகள், மினசார வசதிகள் போன்ற உட்கட்டுமாண பணிகள் நிதியினை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன்றைய வீடமைப்புத்திட்ட கையளிப்பு விழாவுக்கு பிரதம அதிதிகளாக இலங்கைகான இந்திய உயர்ஸ்தாணிகள் தரஞ்சித் சிங் சந்து, வீடமைப்பு நிர்மாணத்துறை கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொள்வதுடன் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு காணியுறுதிகளை வழங்கிவைப்பார். முதலாவது இந்திய வீடமைப்பத்திட்டத்திற்கு ‘மகாத்மா காந்திபரம்’ என பெயரிடப்பட்ட நிலையில் இரண்டாவது திட்டமான இந்த புதிய கிராமத்துக்கு தொழிற்சங்க உரிமைக்காக போராடி உயிர் நீத்த தொழிலாளியான ஆபிரஹாம் சிங்கோ வின் பெயர் பெயர் சூட்டபபட்டுள்ளது.

1815 முதல் இலங்கைக்கு முதல் இலங்கை பெருந்தோட்டக் கைத்தொழிலில் தொழிலாளர்களாக இந்தியாவில் இருந்து படிப்படியாக அழைத்துவரப்பட்ட மலையகத்தமிழ் மக்கள் 1931 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமையின் கீழ் இலங்கை பிரஜைகளானபோதும் 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த ஆண்டிலேயே இலங்கையில் வாக்குரிமை பறிக்கப்பட்டவர்களாயினர். அதன்பின்னர் தொழிற்சங்க கட்டமைப்பின் ஊடாகவே மலையக மக்கள் தமது அரசியல் உரிமைகளையும் நிலைநாட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆகவே 1948 ஆம் ஆண்டுக்குப்பிறகு மலையகத்தில் தொழிற்சங்கங்கள் படிப்படியாக உருவாகத்தொடங்கின. எனினும் அப்போது தோட்டங்களை நிர்வகித்துவந்த பிரித்தானிய கம்பனிகள் தொழிற்சங்கங்கள் உருவாகுவதையும் செயற்படுவதையும் இலகுவாக அனுமதிக்கவில்லை. சில சமயங்களில் அரசாங்கம் தொழிற்சங்க பதிவுகளை ஏற்றுக்கொண்டபோதும் கூட தோட்ட நிர்வாகங்கள் அத்தகைய தொழிற்சங்கங்கள் இயங்குவதை தடைசெய்வனவாகவே செயற்பட்டுள்ளன.

1956ம் ஆண்டு தொழிற்சங்க தலைவர் ஏ.அஸீஸ் தலைமையில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கமாக ஸ்தாபி;கப்பட்டது. ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், முதலாளிமார் சம்மேளனம் அதை ஏற்க மறுத்ததால் தோட்டங்களில் தொழிலாளர் களிடையே அடிக்கடி மோதல்கள் இடம்பெற்றன. இதற்கு எதிராக 1956 மே மாதம் டயகம பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1956 மே 2ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் இரண்டு வாரங்கள் தொடர்ந்த போதும் தொழிலாளர்களின் கோரிக்கைகளைத் தோட்ட நிர்வாகம் தீர்க்க முன்வரவில்லை. இதற்காக அட்டன் தொழில் திணைக்களத்தின் மூலம் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு வர மறுத்த தோட்ட நிர்வாகத்தின் செயலைக் கண்டித்து டயகம பகுதியில் எட்டுப் பிரிவைச் 10,000 தொழிலாளர்கள வேலை நிறுத்த்தில் ஈடுபடலாயினர். ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் வருகையை விரும்பாதவர்கள் செய்த சூழ்ச்சியில் தொழிலாளர்களை இரண்டாகப்பிளவடையச் செய்து ஒரு பகுதியினரை வேலைக்குச் செல்ல தூண்டப்பட்டனர்.

இது தொழிலாளர்களிடையே கைகலப்பை உருவாக்கியது. இந்த கைகலப்பை அடக்குவதற்கு பொலீசார் வரவழைக்க்பபட்டதோடு அப்Nபோது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் போராட்டத்துக்கு தலைமை வகித்த தொழிலாளியான ஆபிரஙாம் சிஙகோ 18-5-56 ஸ்தலத்திலேயே கொல்லப்படடார். அல்விஸ் அப்புகாமி, முதியான்சலாகே உக்குமெனித்த தம்பதியருக்கு பிறந்த ஆறு பிள்ளைகளில் ஒருவரான ஆபிரஹாம் சிங்கோவின் மரணம் டயகமவிலிருந்து நாடு பூராகவும் எதிரொலிக்கச் செய்தது, அப்போதைய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செயற்பட்ட கே.ராஜலிங்கம் அதிரச்சியில் மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆபிரஹாம் சிங்கோவின் இறுதி ஊர்வலம் தொழிற்சங்கவாதி சி.வி.வேலுப்பி;ள்ளை தலைமையில் இடம்பெற்றுள்ளது. இறுதி யாத்திரைக்கான ஏற்பாட்டையும் இவரே நேரில் நின்று செய்துள்ளார்;. சுமார் இரண்டு மைல் நீளமான இறுதி உர்வலத்தில் அந்த நாட்களிலேயே 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதாக பதிவு செய்யப்படடுள்ளது.

இரங்கல் உரையாற்றிய கவிஞரும் தொழிற் சங்கவாதியுமான ஸி.வி. வேலுப்பிள்ளை பின்வருமாறு கருத்து தெரிவித்து உள்ளார். ‘தொழிற்சங்கத்தைத் தோட்டங்களில் ஸ்தாபிப்பதற்கு தொழிலாளர்கள் தங்களின் உயிரைப்பலிகொடுத்த சம்பவங்கள் 1940 முதல் தொடர்ச்சியாக இன்றுவரை இருந்து வருகிறது. இவை மலையக தொழிற்சங்க சரித்திரத்தில் இடம்பெற வேண்டியவை. டயகம் தோட்டத்தில் புதிய தொழிற்சங்கத்தை முதலாளிமார் சம்மேளனமும், தோட்ட நிர்வாகங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று எழுத்த போராட்டத்தில் கிடைக்கும் வெற்றி ஏனைய தோட்டத் தொழிலாளர்களுக்கும் உற்சாகமூட்டுவதாக இருக்கும். இத்தகையதொரு போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்ததை என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாகக் கருத வேண்டியுள்ளது’

ஏப்ரகாம் சிங்கோவின் மரணத்திற்குப் பின்பும் 48 நாட்கள் டயகம தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்தனர் இத்துப்பாக்கிப் பிரயோகத்தின் எதிரொலியாக அன்று பிரதமராக இருந்து எஸ். டபில்யூ-ஆர்.டி.பண்டாரநாயக்கா உடனடியாகத் தொழில் ஆனையாளர், தோட்ட முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கத் தலைவர்கள் அடங்கிய ஒரு மாநாட்டைக் கூட்டிப் பதிவு செய்யப்பட்ட அனைத்துத் தொழிற்சங்கத்தையும் முதலாளிமார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தார்.

தோட்டங்களில் போலிசார் அத்துமீறி பிரவேசிக்கக் கூடாதெனவும் உத்தரவிடப்பட்டது. இது இப்போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆப்ரஹாம் சிங்கோவின் உயிர்த்தியாகததில் இடமபெற்ற இந்தத் திருப்பம் இலங்கைத் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்தகையதொரு தியாகி உயிர்நீத்த டயகம மண்ணில் அமையும் புதிய கிராமத்துக்கு ‘ஆபிரஹாம் சிங்கோபுரம்’ என பெயரிடுவது ஒரு வரலாற்று மீட்டெடுப்பாகும்.

(தகவல்கள்: ‘உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள்’ (பக் 33)- மாத்தளை ரோகிணி (1993 – சென்னை இளவழகன் பதிப்பகம்)

 

திலகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here