கடந்த 04 மாதகாலமாக பற்சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது. காரணம் பல் சிகிச்சை பிரிவிற்குரிய நான்கு வைத்தியர்கள் வெளிநாட்டுக்கு சென்றமையே என தெரிவித்தனர்.
ஹட்டன் டிக்கோயா பகுதியில் அமைந்துள்ள கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பற்சிகிச்சை பிரிவு சமீபகாலமாக மூடப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரும் அசௌகரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகப்பிரிவிடம் வினவிய போது அவர்கள் தெரிவித்ததாவது,
கடந்த 04 மாதகாலமாக பற்சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது. காரணம் பல் சிகிச்சை பிரிவிற்குரிய நான்கு வைத்தியர்கள் வெளிநாட்டுக்கு சென்றமையே என தெரிவித்தனர்.
மேலும், தற்காலிகமாக மாற்று வைத்தியரை நிர்வாகம் நியமித்த போதிலும் குறித்த வைத்தியரும் மகப்பேற்று விடுமுறையில் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இது குறித்து நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் நிஸ்ஸங்க விஜேவர்தன ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
ஹட்டன்- டிக்கோயா பகுதி கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதனடிப்படையில் நாம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மேலும், அவிசாவலை ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த பற்சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரை கிளங்கன் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும், அவிசாவலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அவரை விடுவிக்காமையினால் குறித்த வைத்தியர் இன்னும் பதவியேற்காமல் இருக்கின்றார்.
இதுதொடர்பில் விசேட கவனம் செலுத்தி வெகுவிரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.