அதிகளவில் டிஜிட்டல் திரைகளை பாவனை செய்யும் பாலர் பாடசாலை மாணவர்களின் மன மற்றும் உணர்திறன் வளர்ச்சிக்கு பாதகமான வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.
அதிகளவில் திரையை பார்ப்பதால் சிறுவர்கள் பேச்சுத் திறன் தாமதிப்பு, தூக்கம் குறைவு, அவதானிப்பு திறன் குறைதல், அடாவடித் தனமாக நடந்துகொள்ளும் தன்மை உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என சிறுவர் நோய் தொடர்பிலான சிரேஷ்ட பேராசிரியர் பூஜித விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அளவுக்கு அதிகமான திரைப் பாவனை சமூக பிணைப்பு, உடற் செயற்பாடுகள் மற்றும் மொழித் திறன் விருத்தியை தடுப்பதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதனால் திரையை பார்க்கும் நேரத்தை குறைப்பதாகன வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு பேராசிரியர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தோடு 2 வயது டிஜிட்டல் திரைகளை பார்ப்பதை முற்றாக தவிர்ப்பது சிறந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாலர் பாடசாலை மாணவர்கள் நாளாந்தம் 13 மணித்தியால தூக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும், சுகாதார மேம்பாட்டின் நிமித்தம் குறைந்தபட்சம் 3 மணித்தியாலங்களாவது விளையாடுவது அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.