டித்வா சூறாவளிக்கு முகம்கொடுக்க முன்னாயத்தம் இருக்கவில்லை – தெரிவுக்குழு அமைக்குமாறு சஜித் அணி கோரிக்கை!

0
81

பேரழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடர்பில் பூரணமாக ஆராய்ந்து அறிக்கையொன்றை தயாரிப்பதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அது குறித்த கோரிக்கை கடிதம் சபாநாயகரிடம் இன்று (18) கையளிக்கப்பட்டது.

அந்த கடிதத்தில் “இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான பேரழிவாக கருதப்படும் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக இன்னும் மதிப்பீடுகள் செய்யப்படவில்லை.

ஆனால் இதுவரை நடந்துள்ள அனர்த்தங்களில் இந்த பேரனர்த்தம் முக்கியமான ஒன்றாக நாம் கருதுகிறோம். இந்த துயர் மிகுந்த நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து, முன்னறிவிப்புகளைச் செய்திருந்தன என்பது ஏலவே பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த நிலைமைக்கு முகம்கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் எந்த வகையிலும் முன்னாயத்தமின்றி இருந்தமை கவலைக்குரிய விடயமாகும். இதுபோன்ற முன்னாயத்த தயார் நிலை எடுக்கப்பட்டிருந்தால், ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறிப்பிட்டளவில் தடுத்திருக்க முடியும் என்பது எமது நம்பிக்கையாகும். அண்மைய காலங்களில் இதுபோன்ற பேரழிவுகள் இரண்டு அதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவை இடம்பெற்ற போது விசேட தெரிவுக் குழுக்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சபாநாயகர் அவர்களே, இதன்பிரகாரம் இந்தப் பேரழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடர்பில் பூரணமாக ஆராய்ந்து அறிக்கையொன்றை தயாரிப்பதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு இதனூடாக வினயமாக கோரிக்கை விடுக்கிறோம்.

அவ்வாறே, நிலையியற் கட்டளை 101 இன் விதிகளில் என்ன கூறப்பட்டிருந்த போதிலும், அனர்த்தங்களுக்கு இலக்கான 22 மாவட்டங்கள் காணப்படுவதனால், அந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையிலும், எதிர்க்கட்சியில் 12 கட்சிகள் இருப்பதனாலும், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக் கூடிய வகையிலுமாக, இதற்கேற்ற விகிதாசாரத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை அதிகரிக்கக்கூடிய வகையிலுமாக, தெரிவுக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேலும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த விடயத்தில் உங்களிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பை மதிக்கிறோம்.
சட்டத்தரணி அனுராத ஜயரத்ன (பா.உ)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here