ஈரானில் டெல்டா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஏபி வெளியிட்ட செய்தியில், “சமீப நாட்களாக ஈரானில் டெல்டா வைரஸ் காரணமாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகளை ஈரான் அரசு மீண்டும் அறிவித்துள்ளது. அதன்படி கரோனாவை அதிகரிக்கும் பூங்காக்கள், உணவு விடுதிகள், சலூன், மால்கள், புத்தக நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்று அதிகம் உள்ள நகரங்களுக்கு இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் தடுப்பூசிகளைச் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் கரோனாவால் அதிகம் பாதிப்படைந்த நாடு ஈரான் ஆகும். இந்த நிலையில் ஈரானில் டெல்டா வைரஸ் காரணமாக ஐந்தாம் அலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கரோனாவால் மோசமாக பாதிப்படைந்த நாடாக ஈரான் கருதப்படுகிறது. ஈரானில் இதுவரை கரோனாவுக்கு 80,000 பேர் பலியாகி உள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகளில் புதிதாக உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் பி.1.1.7 வகை கரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் பி.1.351 வகை வைரஸ்கள், பிரேசிலில் பி.1. வகை வைரஸ்கள் தொற்றுப் பரவல் வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்ற வைரஸ் தற்போது 96 நாடுகளில் பரவியுள்ளது.