கல்வியில் தகைமையில்லாதவர்களே நல்லாட்சியில் உயர் பதவி வகித்து வருவதாகவும், இது கல்வித் துறையிலும் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறிப்பாக கல்வித் துறையில் காணப்படும் தகைமை மட்டங்களை மீறி சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் பல முறை பரீட்சைக்கு தோற்றி சாதாரண சித்தியை கூட பெற்றுகொள்ள முடியாத பலர் இன்று கல்வித் துறையில் நிறைவேற்று அதிகாரங்கள் உடைய அதிகாரிகளாக அமர்த்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
மேலும் ஊழல் குற்றசாட்டில் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக காணப்பட்ட ஆறு பேர் இன்று பிரதமரின் அலுவலகங்களில் அரச அதிகாரிகளாக முக்கிய பதவிகளில் செயற்பட்டு வருவதாக அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.
இதேவேளை, அரசியல் வெற்றி மற்றும் கட்சி ஆதரவு என்பவற்றினை எதிர்பார்த்து ஊழல் தொடர்பான விசாரணைகள் திசைத் திருப்பப் படுவதாகவும் மேலும் சில விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையிலும் ஜனாதிபதி அனுமதி மற்றும் தீர்மானங்களுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளவை ஜனாதிபதி காரியாலயத்திலே முடிவுகளற்று இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஊழலுக்கு எதிரான விசாரணைகள் என்ற பேரில் அழகான நாடகம் இப்போது அரங்கேறுவதாகவும், மஹிந்த காலத்தில் காணப்பட்ட முறையற்ற விதத்திலான ஆட்சியையே நல்லாட்சியும் மிக வேகமாக கொண்டு செல்வதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.