பாராளுமன்ற நடைமுறைகள் எவை, அரசாங்க கட்டமைப்பு என்றால் என்ன என்பது பற்றி அறிவில்லாத அரசியல் கத்துக்குட்டிகளே பன்முகப்படுத்தப்பட்ட நிதியைக்கூட இலஞ்சம் எனக்கூறி கூவித்திரிகின்றன. கனவில்கூட ‘டீல்’ பற்றிய சிந்தனை இருப்பதாலேயே அத்தகையவர்கள் அடிக்கடி டீல் அரசியல் பற்றி பேசிவருகின்றனர் – என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
கடந்த காலங்களிலும் பல குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக முன்வைத்தனர். அவை போலியானவை என்பது உறுதியாகியுள்ளது. முடிந்தால் நிரூபித்துக்காட்டுமாறு மீண்டும் சவால் விடுக்கின்றேன் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
“பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளாவர். எனவே, மக்களுக்குரிய சேவைகளை முன்னெடுப்பதற்கு பாதீட்டில் அவர்களுக்கு நிதி ஒதுக்கப்படும். இந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியென்பது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய உரிமையாகும். அந்த உரிமையையே நாம் போராடி பெற்றுள்ளோம். எவரிடம் இருந்தும் தனிப்பட்ட ரீதியில் பணம் பெறவில்லை. பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியையே பெற்றுள்ளோம்.
இந்த நிதி எமக்கு நேரடியாக கையில் கிடைக்காது, எவரும் தனிப்பட்ட ரீதியில் வழங்கப்போவதும் இல்லை. அபிவிருத்தி திட்டங்களுக்கே நிதி வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்பட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை கண்டி மாவட்ட செலயகத்துக்கு சென்றால் பரிசீலிக்க முடியும். தகவல் அறியும் உரிமை சட்டமும் உள்ளது. அதன்மூலமும் பெறலாம்.
எனவே, பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் அறிவில்லாத சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகளே, பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதிக்குகூட வேறு கோணத்தில் விளக்கமளிக்க முற்படுகின்றனர். இந்த வங்குரோத்து அரசியல்வாதிகளின் கதையை நம்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் தயாரில்லை. எனவே, சேறுபூசும் அந்த அரசியல்வாதிகளுக்கு மக்கள் தக்கவகையில் பதிலடி கொடுப்பார்கள்.” – என்றார்.