” தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது கண்டி மாவட்ட தமிழ் மக்களின் உயிர்நாடியாகும்

0
161

” தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது கண்டி மாவட்ட தமிழ் மக்களின் உயிர்நாடியாகும். அதற்கு துளியளவும் களங்கம் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அது எமது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ‘இடைக்கால தடை’யை தமிழ் முற்போக்கு கூட்டணி உடனடியாக மீளப்பெற வேண்டும்.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

‘ஒற்றுமை’யே பலம்பொருந்திய ஆயுதம்.தமிழ் பேசும் மக்களின் இருப்புக்கான அடித்தளம். அதனை மேலும் பலமாக்கவே நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். அவர் ‘நடுநிலை’ வகித்த தீர்மானம்கூட, கூட்டணியின் நன்மை கருதியது. எனவே, தடம் புரண்ட – மாறிய இடத்தை சீர்செய்துகொண்டு முன்னோக்கி பயணித்தால் மட்டுமே இலக்கை நோக்கி நகர முடியும். அதனைவிடுத்து அவருக்கு எதிராக ‘சேறுபூசும்’ பரப்புரைகளை முன்னெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் நேற்று (11.12.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு அறிவிப்பு விடுத்தனர்.

“ அலசி ஆராயாமல், அரசியல் சேறுபூசலுக்கு வழிவக்கும் வகையில் எமது கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைப்பீடம் எடுத்த அவசர முடிவு ஏற்புடையது அல்ல. எனவே, ‘கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம்’ என்ற முடிவு உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும். எமது இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் ‘கட்சி, கூட்டணி’யை பிரதிநிதித்துவப்படுத்தாமல் நாம் சுயாதீனமாக செயற்படுவோம்.” – எனவும் அவர்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளனர்.

” எப்போது பிளவு வரும், சரிவு வரும் என வழிமீது விழிவைத்து காத்திருக்கும் – பேரினவாத சக்திகளுக்கு துணைபோகும் சில சதிகார கும்பலுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி எடுத்த முடியானது, தாக்குதலை தொடுப்பதற்கான சிறந்த அஸ்திரமாக அமைந்துவிட்டது. அதனை வைத்துக்கொண்டு மிகவும் மோசமான முறையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக சமூகவலைத்தளங்களில் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் இதை வைத்துக்கொண்டு சிற்றின்பம் கண்டு மகிழ்ந்தது.

அதேபோல நடுநிலை என்ற நிலைப்பாட்டை அரசுக்கான ஆதரவு என சிலர் அர்த்தப்படுத்தினர். இது எமது கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது. அதனால்தான் தவறாக எடுக்கப்பட்ட முடிவை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது அணி என்றும் துரோகத்துக்கு துணைநின்றது கிடையாது, அதேபோல அநீதிகள் அரங்கேறும்போது கைகட்டி வேடிக்கையும் பார்க்காது. கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க சந்தித்த சவால்கள் ஏராளம். அந்த பிரதிநிதித்துவத்தை சிதைப்பதற்கு சிலர் சக்கர வியூகம் வகுத்து செயற்படுகின்றனர். அதற்கு ஏதோவொரு விதத்தில் எமது கூட்டணியும் துணைநின்றுவிடக்கூடாது என உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்” . – எனவும் கண்டி மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here