தமிழ் முற்போக்கு கூட்டணியின் மாற்றத்தை நோக்கிய நடை பயணமானது இலங்கை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்

0
118

“தமிழ் முற்போக்கு கூட்டணியின் மாற்றத்தை நோக்கிய நடை பயணமானது இலங்கை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்”
சோ. ஸ்ரீதரன் தெரிவிப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள நடை பயணமானது மலையகத் தமிழ் மக்களின் கடந்த கால வாழ்க்கை வரலாற்றை மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்துள்ள தலவாக்கலை நோக்கிய நடைபயணம் தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன், வட்டவளை ,டிக்கோயா பிரதேச தோட்டக் கமிட்டி தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் பணிமனையில் இடம் பெற்ற இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ் பிலிப் ,காரியாலய உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சோ. ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:

ஒவ்வொரு தோட்டத்தொழிலாளியும் எமது வரலாற்றை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.1823 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு கூலிகளாக வரவழைக்கப்பட்ட எமது சமூகம் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக இன்று வரை பாடுபட்டு வருகின்றது.200 வருடங்கள் கடந்துள்ள போதும் இந்த நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களை விட எமது மலையக சமூகம் பல்வேறு துறைகளில் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றது.

எமது சமூகம் சுபிட்சமாக வாழ வேண்டுமென்றால் நாம் மாற்றத்தை நோக்கி மேலும் பயணிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.அரசியல் அதிகாரத்தின் ஊடாகத்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இதனைக் கடந்த காலங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி செய்து காட்டியுள்ளது.இதனை எமது தொழிலாளர் உறவுகள் நன்கு அறிந்திருக்கின்றார்கள்.
எனவே எமது மலையகத் தமிழ் சமூகத்தின் இன்றைய நிலையை உலகத்துக்கும் இந்த நாட்டுக்கும் வெளிப்படுத்துவதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவைக்காக உள்ளன.

அதன் அடிப்படையிலேயே எதிர்வரும் 12ஆம் திகதி அட்டனிலிருந்தும் நுவரெலியாவில் இருந்தும் தலவாக்கலை நகரை நோக்கி எமது தலைவர்களுடன் நாங்கள் அனைவரும் நடை பயணத்தை மேற்கொள்ள உள்ளோம்.

இந்த நடை பயணத்துக்கு மலையகத்தில் அரசியல் ,தொழிற்சங்க வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எமது தலைவர் திகாம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆகவே எதிர் வரும் 12ஆம் திகதி மலையகத்தில் இடம் பெறவுள்ள மாற்றத்தை நோக்கிய மாபெரும் நடை பயணமானது இந்த நாட்டு அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here