தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினஅழைப்பு- அணிதிரண்டு வருக!!

0
133

எமது மேதின நிகழ்வுகள் 7ம் திகதி தலவாக்கலையிலும், 6ம் திகதி கொழும்பிலும் நடைபெறும்- அணிதிரண்டு வருக என தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின ஊர்வலமும், கூட்டமும் 7ம் திகதி திங்கட்கிழமை மலையகத்தில் தலவாக்கலையிலும், 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேலகத்தில் கொழும்பிலும் நடைபெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன், கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட கூட்டணியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்வுகளில் கூட்டணியின் தொழிற்சங்க அமைப்புகளின் முக்கியஸ்தர்களும், தொழிலாளர்களும் பிரதான பாத்திரங்களை வகிப்பார்கள்.

7ம் திகதி திங்கட்கிழமை நுவரெலியா மாவட்டத்தில், தலவாக்கலை நகரை நோக்கி மூன்று திசைகளில் இருந்து வருகின்ற ஊர்வல அணிகள் ஒன்று சேர்ந்து, ஊர்வல முடிவில் பொதுக்கூட்டமும் நடைபெறும். அதேபோல் கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு மாநகரின் வட கொழும்பு, மத்தியக்கொழும்பு பகுதிகளை உள்ளடக்கியதாக, புளுமெண்டல் வீதியிலிருந்து ஆரம்பித்து கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி ஊடாக ஊர்வலம் நடைபெற்று ஊர்வல முடிவில் பொதுக்கூட்டமும் நடைபெறும்.

மேதின நிகழ்வுகளில், தொழிலாளர் தேசிய முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்களை முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக இளைஞர் இணையம் ஆகிய அமைப்புகளை சார்ந்த அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், நுவரெலியா, கொழும்பு, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கம்பஹா, கேகாலை, களுத்துறை மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்து பெருந்தொகைகளில் கலந்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here