அட்டன் கப்ரியல் மகளிர் கல்லூரியின் தமிழ்ப் பிரிவுக்கு தமது பிள்ளைகளை தரம் 6 இற்கு உள்வாங்குவதில் கல்லூரி நிர்வாகம் அசமந்தமாக செயற்படுவதாக பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் வலயக்கல்வி பணிமனையின் உத்தரவுகளையும் மேற்படி கல்லூரி நிர்வாகம் அசட்டை செய்வதாகவும் காரணமின்றி தமது பிள்ளைகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தரம் 6 இற்கு தமது பிள்ளைகளை சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் பிள்ளைகளை நேர்காணலுக்கு அழைக்காமல் எந்த காரணங்களும் கூறப்படாமல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு பெற்றோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கல்லூரி அதிபரின் கையொப்பம் இல்லாது இலட்சிணை மாத்திரம் இடப்பட்டு தமக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதையடுத்து பல பெற்றோர்கள் அட்டன் வலயக்கல்வி பணிமனைக்குச் சென்று பணிப்பாளரிடம் இது குறித்து முறைப்பாடு செய்ததையடுத்து அவர் அதிபரிடம் இது குறித்து விளக்கமளித்து சுற்றுநிருபங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை விதிகளின் படி மாணவிகளை உள்வாங்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் நிராகரிக்கப்படுவதாக கடிதங்கள் அனுப்புவது முறையல்ல என்றும் பாடசாலை அதிபரின் கையொப்பங்கள் இல்லாது அனுப்பியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என உதவிக் கல்வி பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் வெள்ளிக்கிழமையன்று மீண்டும் பாடசாலைக்குச் சென்ற பெற்றோர்கள் மற்றும் மாணவிகளை ஒரு மணித்தியாலயத்துக்கு மேல் காக்க வைத்துள்ள கல்லூரி நிர்வாகம், பெற்றோரை அழைத்து, உங்களுக்கு கடிதம் அனுப்புகிறோம் எனக் கூறி திருப்பியனுப்பியுள்ளது.
அட்டன் கப்ரியல் கல்லூரியின் தரம் ஒன்று தமிழ்ப்பிரிவுக்கும் தரம் ஆறுக்கும் மாணவிகளை உள்வாங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்து பல வருடங்களாக சுட்டிக்காட்டப்பட்டும் அது குறித்து கல்வி அதிகாரிகளோ அல்லது அரசியல் பிரமுகர்களோ அக்கறை கொள்வது கிடையாது என விசனம் தெரிவிக்கின்றனர்.