திகா எம்.பி. சிறுவர் தான வாழ்த்துச் செய்தி.

0
199

கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வருகின்ற காலகட்டத்திலும் சிறுவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் உலக நாடுகள் விஷேட கவனம் செலுத்தி வருகின்றன. சிறுவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, இன்றைய கொரோனா சூழலில் அவர்களின் சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு முதலான உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சரியான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதில் ஒன்றிணைவோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள சர்வதேச சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

நாட்டில் சிறுவர்களின் நலன்களைக் பாதுகாக்க பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுத்து வருகின்ற போதிலும் மலையகத்தில் மந்த போசனை அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால் அவர்களின் வளர்ச்சி குன்றி, கல்வியில் கவனம் செலுத்த முடியாமலும் போய் விடுகின்றது. இதை ஒழிப்பதற்கு சமூக ரீதியில் நாம் ஒன்று பட்டு செயற்பட வேண்டியது அவசியமாகும்.

எமது நாட்டில் கடந்த ஒன்றரை வருட காலமாக கொவிட் 19 பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் இணைய வழிக் கல்வியின் ஊடாக தமது கற்றல் நடவடிக்கையைத் தொடர்வதற்குப் பழக்கப்படுத்தப் பட்டுள்ளார்கள். ஆனால், மலையக மாணவர்களில் பெரும்பாலானோருக்கு “ஸ்மார்ட் போன்” மற்றும் “வைபை” வசதிகள் இல்லாமல் இணையத்தின் ஊடாக கல்வி கற்க முடியாத சூழ்நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நாடு வழமைக்குத் திரும்பி பாடசாலைகள் இயங்கும் வரையில் மாணவர்கள் சிரமங்களை அனுபவிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

வசதி படைத்தவர்கள், வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தங்கு தடையின்றி மேலோங்குவதற்கு முடிந்த வரையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் மலையக மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். அவர்களை பாராட்டுவதோடு மாத்திரம் நின்று விடாமல் சிறுவர் துஷ்பிரயோகங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ, அவர்களின் எதிர்காலத்துக்கு உதவும் வகையில் பொதுவான ஒரு வேலைத் திட்டத்தை மேற்கொண்டு நாம் ஒன்றுபட்டு செயற்பட உறுதி பூணுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here