நாட்டில் தினமும் ஒரு மணிநேர மின்வெட்டு அமுலில் உள்ள நிலையில், எதிர்வரும் 15ம் திகதியின் பின்னர் நாள் ஒன்றுக்கு பல மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்சார விநியோகத்தை பொறுத்த மட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. நீரேந்தும் பகுதிகளில் மழைவீழ்ச்சி இல்லாது போனால் நீர் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக் கூடும்.
அனல் மின் உற்பத்தியை எடுத்துக்கொண்டால் அங்கும் உற்பத்தி மூலப்பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. களனி திஸ்ஸ மின்சார நிலையத்தில் உற்பத்தியை மேற்கொள்வதற்கு உலை எண்ணெய் அவசியமாகும்.
அங்குள்ள இயந்திரங்கள் உலை எண்ணெயால் ஆரம்பிக்கப்பட்டு டீசலால் செயற்படுகின்றன.
எனினும், தற்போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து உலை எண்ணெய் கிடைக்காமையினால் இயந்திரங்கள் டீசல் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே அந்த இயந்திரங்களில் பொறியியல் பிரச்சினை ஏற்பட்டு நாட்டின் பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டது என இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தி சமைக்கும் நுகர்வோர் மாலை 6 மணிக்கு முன்னதாக உணவைத் தயாரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.