ஊவா மாகாணத்தில் பாடசாலையின் பெண் அதிபரை முழந்தாழிடச் செய்த விவகாரத்தைக் கண்டிக்கும் முகமாக திருகோணமலையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜா விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,ஊவா மாகாணத்தில் இடம்பெற்றுள்ள இச்செயல் கல்விப் புலத்திலுள்ளோரை அவமதிப்பதாக உள்ளதோடு இது போன்று அருவருக்கத் தக்க சம்பவங்கள் இனிமேல் எதிர்காலத்தில் நாட்டில் எப்பாகத்திலும் இடம்பெறக் கூடாதென்பதற்காக இந்தக் கண்டன எதிர்ப்பைக் காட்டவுள்ளோம்.
கிழக்கு மாகாண கல்விப் புலத்திலுள்ளோரின் கண்டனத்தைத் தெரிவிக்கும் முகமாக எமது சங்கம் அடையாள எதிர்ப்பை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு முன்னால் நடாதத்த திட்டமிட்டுள்ளது.
கல்வித் துறையை சுதந்திரமானதாகவும் அரசியல் கலப்பற்றதாகவும் இயங்குவதற்கு அரசியல்வாதிகள் அனுமதிக்க வேண்டும்.
தமது அரசியலை உரசிப் பார்க்கின்ற இடமாக கல்வித்துறையை எவரும் பன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் அடையாள எதிர்ப்பாக எமது கண்டனம் இடம்பெறும்.
இடம்பெற்ற சம்பவம் குறித்து நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதேவேளை சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர் உண்மையை மூடி மறைக்கும் வகையில் எதுவுமே நடக்கவில்லை என்று ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையின் உண்மைத் தன்மை குறித்தும் ஆராயப்பட வேண்டும்.
உண்மையை மூடி மறைக்கும் அல்லது முன்னுக்குப்பின் முரணாக பொது வெளியில் கருத்து வெளியிடுவதற்கு கல்விப் புலத்திலுள்ளோருக்கான தடைகள் குறித்தும் ஆராய்ந்து உண்மை நிலை தெளிவு படுத்தப்பட வேண்டும்.