உலக மக்களில் தமிழ் மக்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒரு புறத்தில் தமிழர்களான நாம் உலகின் மூத்தமொழி பேசும் பெருமிதம் கொண்டவர்கள். இன்னொரு புறம் எமது பூர்வீகத்தை புறம் தள்ளி செல்ல விரும்பாதவர்கள். இந்த சிறப்புக்களுடன் தமிழனர் எதற்கு அஞ்சா நெஞ்சம் கொண்டவன் என்பதையும் இனத்தின் அழிவு கண் முன்னே நிகழும் போதும் நேர்மை மாறாதவர்கள் என்பதையும் உலகிற்கு உணர்த்திய சிறப்பு மிக்க தமிழ் பூமி என்றால் அதற்கு யாழ்ப்பாணத்தை மிஞ்சிய உதாரணம் உண்டா!
அத்தகைய சிறப்பு கொண்ட யாழ் மண்ணின் இன்றைய நிலை பற்றி கேட்டால் தமிழர் மத்தியில் இருப்பது எப்படியிருந்த யாழ்ப்பாணம் இப்படி மாறிவிட்டதே என்ற ஆதங்கம் மட்டும் தான். எண்ணற்ற பெருமைகள் கொண்ட யாழ் மண்ணில் இன்று பல புதிய ஆடையகங்கள், வியாபார கட்டிடங்கள் என்று பலவும் முளைவிட ஆரம்பித்திருக்கும் காலத்தில், மண்ணில் காலகாலமாக வேறுன்றி காணப்பட்ட உரிமைகள் பரிபோவது பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.
குறிப்பாக முப்பது வருடங்கள் யுத்த சத்தத்தை மட்டுமே கேட்ட யாழ். மக்கள் இன்று பல உலக நாடுகளில் இருந்து சாதனை குரல் எழுப்புகிறார்கள். அதையென்னி பெருமிதம் கொள்ளுகையில்,அவர்கள் சொந்த பூமியில் விட்டுச் சென்ற சொத்துக்கள் அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் சூரையாடப்படும் அவலம் யாழ். மண்ணில் நடப்பது குறித்து பலரும் கண் வழித்து பார்க்காமல் இருக்கின்றனர்.
இப்படிச் சம்பவங்கள் ஆரம்பத்தில் நூற்றில் ஒருவருக்கு நடந்தாக செய்திகள் வெளியானதால் அதுபற்றி பலரும் கண்டுகொள்ளவில்லை. இன்று யாழ். மண்ணில் அவ்வாறான எண்ணற்ற சம்பவங்கள் இடம்பெறுவதும் அதனை தடுக்க முடியாமல் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தவிப்பதும் இன்று சாதாரண நிகழ்வாகியுள்ளது. குறிப்பாக இவர்களுக்கு உதவ நினைப்பவர்களும் இவர்களின் தேவையை நிறைவேற்றும் முன்னதாக வெளிநாடுகளில் இருப்பவர்கள் என்பதால் அவர்களின் தேவைகளை இழுத்தடிப்பு செய்து பணம் பறிக்கும் செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, தமது காணி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் பொலிஸ் நிலையம் சென்றால் அங்கும் அதிக பணம் தேவைப்படுவதோடு சட்டத்தரணிகளை நாடிச் சென்றால் அவர்களுக்கு அதைவிடவும் மிஞ்சிய தொகையிலான பணத்தை செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வெளிநாடுகளில் சொந்த தொழில் முயற்சிகளில் ஈடுபடுவர்கள் இவற்றை தாக்கு பிடித்தாலும் அங்கு நிறுவனங்களில் கீழ் பணி புரிபவர்கள் தாயகத்துக்கு வந்து தங்கள் சொத்துக்களை மீட்பதற்கு போதிய பணம் இல்லாமல் திரும்பி செல்வதும் சிலர் திரும்பிச் செல்ல முடியாமல் பொய் வழக்குகளுக்கு ஆட்பட்டு கிடக்கின்ற கதைகளும் யாழ் மண்ணுக்குள் இன்று ஏராளமாக நிகழ்வதை காண முடிகிறது.
இது பற்றி ஆராய வேண்டிய நீதித்துறையும் முற்றாக ஊழல் பிடிக்குள் சிக்கி கிடப்பதால் சட்டத்தரணிகள், பொலிஸார், குண்டர்கள் , அடாவடிக் கும்பல் உள்ளிட்ட வலையமைப்பின் உதவியுடன் இந்த செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை யாழ். மக்கள் என்றும் நினைத்துப் பார்க்காத அவலமாகும்.
இதனால் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்து தனது காணியை பார்க்கின்ற போது அங்கு அவரது காணி பிரிதொருவருக்கு விற்பனை செய்யப்பட்டு அதற்கு வேறொரு தரப்பு குடியேறி இருப்பதும் ,பின்னர் காணியின் உண்மையான உரிமையாளர் பொலிஸாரையும் சட்டத்தரணிகளையும் நாடிச் சென்று அங்கும் தங்களுக்கு நீதி கிடைக்காமல் போவதால் இன்னலுற்று தவிக்கின்றனர். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருகின்ற ஒருவருக்காக பொலிஸ் நிலையத்தில் ஆஜராவதற்கு சட்டத்தரணியொருவர் கிட்டத்தட்ட 85 ஆயிரம் ரூபா வரையில் வாங்கும் நிலை காணப்படுகிறது.
மறுபுறத்தில் இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமான முறையில் ஆஜராகும் பொலிஸார் இடமாற்றப்படுவதால் மற்றைய பொலிஸார் இவ்வாறன விடயங்களில் தலையீடு செய்வதை விரும்புவதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். குறிப்பாக சொல்ல முடியாத துயரங்களுக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தங்களது நாடுகளுக்கு வந்தவர்கள் மீண்டும் அங்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் நாட்டிலிருந்து அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.
சிலர் இந்த விடயங்களுக்கு எதிராக சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொள்ள எத்தனிக்கும் போது அவர்களின் வீடுகளின் முன்னாள் நிற்கும் வாகனங்கள் எரிக்கப்படுவதும்,வீட்டிலுள்ள பெண் பிள்ளைகள் அச்சுறுத்தப்படுவதும் சாதரணமாக நிகழ்வதாக கூறும் அவர்கள், அந்த அச்சத்தினாலேயே தங்களது சொத்துக்களை இழந்து தவிக்கிறோம் என்று ஆதங்கப்படுகின்றனர்.
அதேபோல், இவ்வாறான சட்டரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் காணி மாபியா குழுவினர் அவற்றை உரிமையாளர்கள் அடைந்துகொள்வதற்கு முன்னதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து அவற்றை விற்று பணம் பார்க்கும் நிலைமையும் காணப்படுகிறது. இவ்வாறான காணிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று உரிமையாளர்கள் பொது அறிவிப்புக்களை பத்திரிகை உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் வாயிலாக கூறினாலும் அது அது உரிய தரப்பிரனர் கவனத்திற்கு செல்வதில்லை என்று காணி உரிமையாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
இவ்வாறு கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு யுத்த காலத்தில் சென்றவர்கள் இன்று யாழில் விட்டுச் சென்ற தங்களது காணிகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்தும் அவற்றை மாபியா காரர்களிடமிருந்து மீட்க முடியாமல் அல்லாடுகின்றனர். அதற்கான பல ஆதாரங்களும் உள்ளன. ஆனால் இன்னும் சிலர் தங்களுக்கு நேர்ந்த இவ்வாறான அநியாயங்களுக்கு நீதி தேட முடியாமல் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் இருந்து திரைமறைவில் அழுது புலம்புகிறார்கள்.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இவ்வாறு அஞ்சி ஒடுங்கி விடுவதால் மாபியா கும்பல் விரிவடைந்து செல்கிறது. கடவுளிடம் மட்டும் தான் தங்களுக்கான நீதி கிடைக்கும் என்ற ஏக்கத்தில் அவர்கள் முடங்கி கிடப்பவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த விடயத்திற்கு தீர்வு தேடி ஒருமித்த குரல் எழுப்ப ஆரம்பித்தால் மட்டுமே இதுபற்றிய உண்மைக் கதைகள் பலவும் வெளியில் வர ஆரம்பிக்கும்.





