தீபாவளியை முன்னிட்டு ஹட்டன் நகரில் விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பழைய ஆடைகள் ஹட்டன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹட்டன் நகரில் தீபாவளி வர்த்தக நடவடிக்கைகள் களைக் கட்டியுள்ள நிலையில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அதிக வர்த்தகர்கள் ஹட்டன் நகருக்கு தமது பொருட்களுடன் வருகைத் தந்துள்ளனர்.
இந்நிலையில், தெல்தெனிய- உடிஸ்பத்துவ பிரதேசத்திலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக ஹட்டனுக்கு வந்த வர்த்தகர் ஒருவரிடம் சேர்ட் ஒன்றை கொள்வனவு செய்த நபர் ஒருவர் வீட்டுக்குச் சென்று, அதனை பார்த்தப் போது, அது கிழிந்த நிலையில் காணப்பட்டதாகவும், பின்னர் அதனை சம்பந்தப்பட்ட வர்த்தகரிடம் கொடுத்து மாற்ற முற்பட்ட போது அவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சேர்ட்டை கொள்வனவு செய்த நபர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபரிடமிருந்து பெருந்தொகை பழைய ஆடைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.