” டீசல் இருக்கிறதா…., பெற்றோல் இருக்கிறதா….., பால்மா இருக்கிறதா….., இப்போது சுகமா (தெங் செபத)” – என பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாணியிலேயே கேள்விக்கணைகளைத் தொடுத்து, அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன்.
நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நீண்டநேர மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் அட்டனில் நேற்று (06.03.2022) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, மேற்கண்டவாறு கேள்விகளை எழுப்பி, அரசுக்கு பதிலடி கொடுத்தார் சாணக்கியன்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற எமது போராட்டத்துக்கு மலையக மக்களின் ஆதரவும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டவே இங்கு வந்துள்ளோம். நீங்கள் அனைவரும் அணிதிரண்டு ஆதரவை வழங்கியுள்ளீர்கள். அதற்காக நன்றிகள். மலையக பெருந்தோட்ட மக்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை அவர்கள் தோளில் சுமக்கின்றனர். ஆனால் அவர்களின் பிள்ளைகளுக்கு குடிப்பதற்கு பால்மா இல்லை.
ஓரிரு இடங்களிலேயே ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் அது போதுமானதாக இல்லை. 2000 ரூபா வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை ,இந்த அரசு தோல்வியடைந்துவிட்டது. செல்வாக்கையும் இழந்துவருகின்றது. தமிழ் மக்கள் அனுப்ப வேண்டியதில்லை, அரசுக்கு வாக்களித்தவர்களே வீட்டுக்கு அனுப்பிவைப்பார்கள்.
மஹிந்த ராஜபக்ச எதிரணியில் இருக்கும்போது சில கேள்விகளை கேட்பார். அதனை நான் இங்கு கேட்க விரும்புகின்றேன்.
டீசல் தியனவாத (டீசல் இருக்கிறதா)
பெற்றோல் தியனவாத (பெற்றொல் இருக்கிறதா)
கிரிபிடி தியனவாதா (பால்மா இருக்கிறதா)
தெங்க செபத (இப்போ சுகமா)” – என்றார்.