மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்கள் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
முக்கிய நகரைவிட்டு வெளியேறும்படி பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு காஸாவிலுள்ள கான் யூனிஸ் நகரிலிருந்து வெளியேறி, மேற்குப் பகுதிக்குச் செல்லும்படி பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.தெற்கு காஸாவிலும் ஹமாஸ் படையினர்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதைக் காட்டுவதாகவே இது அமைந்துள்ளது.
“மக்களை வேறிடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி வருகிறோம். பலருக்கும் இது எளிதானதாக இருக்காது என்று தெரியும். ஆனாலும், சண்டையில் அப்பாவி மக்கள் சிக்கிக்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை,” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகின் உதவியாளரான மார்க் ரெகெவ் கூறினார்.
இதனால், இஸ்ரேல் தாக்குதலால் ஏற்கெனவே தென்பகுதிக்கு இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோர் மீண்டும் இடம்பெயரும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களுடன் கான் யூனிஸ் நகர மக்களும் வேறிடம் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் கடும் மனிதநேய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கான் யூனிஸ் நகரில் 400,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.அந்நகரில் வசிப்போர் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு நேற்று முன்தினம் இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
அத்துடன், மேற்குப் பகுதிக்கு இடம்பெயரும் பொதுமக்கள் மீண்டும் இடம்பெயரத் தேவையிருக்காது என்று உறுதியளிப்பதாகவும் தெரிவிக்கப்டுகிறது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளி அமைப்பு திடீரென இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தாக்குதலில் இதுவரை ஏறக்குறைய 1,200 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். 240 பேர் பிணை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் குண்டுவீச்சால் காஸா நகரின் பெரும்பகுதி இடிபாடுகளாகக் காட்சியளிக்கிறது. வடபகுதியிலிருந்து அனைவரையும் வெளியேறச் சொல்லி உத்தரவிட்டுள்ளதால் மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்கள் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.