தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கம் ஒன்றுக்கு கொவிட் தொற்று உறுதி.

0
154

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்துவரும் சிங்கம் ஒன்றுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சிங்கம் 3 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும் தொண்டை நோவினால் சிங்கம் அவதிப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்பின்னர் சளி மாதிரி பெறப்பட்டு பேராதனை கால்நடை மருந்துவ பீடத்துக்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பான மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய, குறித்த சிங்கத்துக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் 8 வருடங்களாக வசித்துவரும் ‘தோர்’ என்ற இந்த சிங்கம், கடந்த 2012 ஆம் ஆண்டு தென் கொரியாவிலிருந்து தேசிய மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த சிங்கத்துக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, சிங்கத்துக்கு பொறுப்பாக இருந்த மூவரைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தோர் வசித்து வரும் பகுதியில், இவ்வாண்டு கொண்டுவரப்பட்ட ஷீனா என்ற சிங்கமும், மேலும் 4 சிங்கங்களும் வசித்துவருகின்றன.

இந்த விலங்குகளுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சி சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த இரு வாரங்களுக்குள் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்துவந்த வரிக்குதிரையொன்றும், நீர்யானையொன்றும் திடீர் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளன.

இந்த இரு விலங்குகளுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று மிருகக்காட்சி சாலை நிர்வாகத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தற்போது தேசிய மிருகக்காட்சி சாலை தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் விலங்குகளுக்கு கொவிட் தொற்று உறுதியாவது மிகவும் ஆபத்தான நிலைமை என விலங்கியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உலகின் பல்வேறு நாடுகளில் மிருகக்காட்சி சாலைகளிலுள்ள விலங்குகளுக்கு கொவிட் தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here