முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சந்தேக நபராக பெயரிடப்பட்டிருந்தார்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவிட கோரி தேசபந்து தென்னக்கோன் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் தேசபந்து தென்னக்கோனின் முன்பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மிரிஹான பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஆகஸ்ட் 20 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.